கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி சூலூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு ஆகிய 5 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலையில் உள்ளது. கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
அ.தி.மு.க தொண்டாமுத்தூர் வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மட்டுமே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். அ.தி.மு.க. பலம் வாய்ந்த தொகுதிகளாக கருதப்படும் மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 1996ம் ஆண்டில் மட்டுமே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வென்ற நிலையில், இந்த முறை இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.