கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நமது திராவிட மாடல் ஆட்சியில் பத்மநாபபுரம் தொகுதிக்கு அருவிக்கரையில் இருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் வரை செல்ல உயர்மட்ட இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தக்கலையில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. வேர்க்கிளம்பி முதல் அழகியமண்டபம் வரையிலான சாலை இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடும் செல்லசுவாமிக்கு ‘அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்’ சின்னத்திலும், கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் பிரவீன் ஆகியோருக்கு ‘கை’ சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
கன்னியாகுமரி தொகுதியில் மகேஷ் அவர்களுக்கும், நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின் அவர்களுக்கும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்டின் அவர்களை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.
கல்லூரி காலத்திலிருந்தே பொதுவாழ்வில் ஈடுபட்டு, தன் வாழ்வை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தவர் அவர். எளிமையானவர், உழைப்பாளி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்போடு பழகக்கூடியவர். தற்போது தி.மு.க துணை அமைப்புச் செயலாளராக தலைவருக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த முறை நாகர்கோவிலை நாம் விட்டுவிடக்கூடாது.
அதேபோல், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மகேஷ் அவர்களும் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். மாவட்டச் செயலாளராக, சிறந்த மேயராக மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர். இவர்கள் இருவரையும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் இவர்களை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையப் போவது உறுதி. அதற்கு வலுசேர்க்கும் விதமாக இங்கிருந்து வெற்றியைத் தேடித்தாருங்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது திராவிட மாடல் அரசு செய்துள்ள திட்டங்களை மட்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, அதற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோணம் பகுதியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.