Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி இன்று மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொண்டு வந்த மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு பேசினார். வெறும் அரசியல் பேச்சாக இல்லாமல், காவிரி விவகாரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும், புள்ளிவிவரங்களையும் (Data) சட்டமன்றத்தில் அவர் அடுக்கிய விதம் அவையினரை வியப்பில் ஆழ்த்தியது.
தீர்மானத்தை முழுமையாக ஆதரித்துப் பேசிய அவர், காவிரிப் பிரச்னைக்கு இனிமேலாவது ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரிய பல தரவுகளை அவையில் சமர்ப்பித்தார்.
802 கிலோமீட்டர் பயணம்… தமிழகத்தில் தான் அதிகம்!
காவிரி ஆற்றின் புவியியல் அமைப்பைத் துல்லியமாக விவரித்த சௌமியா அன்புமணி, “மேற்குத் தொடர்ச்சி மலையின் தலைக்காவிரியில் தொடங்கி, வங்காள விரிகுடாவில் கலக்கும் வரை காவிரி ஆறு மொத்தம் 802 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இதில் கர்நாடகாவில் 320 கிலோமீட்டரும், இரு மாநில எல்லைப் பகுதியாக 64 கிலோமீட்டரும் பாயும் காவிரி, அதிகபட்சமாக நமது தமிழகத்தில் தான் 416 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. அப்படி இருக்கும்போது, தமிழகத்தின் உரிமையை கர்நாடகா எப்படித் தடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

740 டிஎம்சி தண்ணீரும்… சட்டப்பூர்வப் பகிர்வும்!
தொடர்ந்து பேசிய அவர், ஒரு சாதாரண மழைப் பொழிவுள்ள ஆண்டில் (Normal Year) காவிரிப் படுகையின் மொத்த நீர் இருப்பு மற்றும் அதன் சட்டப்பூர்வப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வத் தரவுகளை அவையில் சமர்ப்பித்தார்:
மொத்த நீர் இருப்பு: 740 TMC (ஆயிரம் மில்லியன் கன அடி)
தமிழகத்தின் பங்கு: 404.25 TMC (இதில் கர்நாடகா பிலிகுண்டுலு எல்லையில் நமக்குத் திறந்துவிட வேண்டிய 177.25 TMC தண்ணீரும் அடங்கும்).
கர்நாடகாவின் பங்கு: 284.75 TMC (இதில் பெங்களூரு நகரக் குடிநீர் தேவையும் அடக்கம்).
கேரளா மற்றும் புதுச்சேரி: கேரளாவுக்கு 30 TMC, புதுச்சேரிக்கு 7 TMC.
சுற்றுச்சூழல் மற்றும் கடல் கலப்பு: நதியின் சுற்றுச்சூழல் ஓட்டத்திற்காக 10 TMC மற்றும் தவிர்க்க முடியாமல் கடலில் கலக்கும் நீராக 4 TMC என மொத்தம் 14 TMC ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 740 டிஎம்சி தண்ணீரும் சட்டப்படி நடுவர் மன்றத்தாலும், உச்ச நீதிமன்றத்தாலும் வரையறுக்கப்பட்டது. வறட்சி காலங்களில் இந்த அளவை விகிதாச்சார அடிப்படையில் (Proportionately) குறைக்க வேண்டும் என்பதும் விதி. இப்படிப் பங்கீடுகள் மிகத் தெளிவாக இருக்கும்போது, கர்நாடகா தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்டி ஒட்டுமொத்தப் பங்கீட்டையும் குலைக்கப் பார்ப்பது சட்டவிரோதம், எனச் சாடினார்.
நிரந்தரத் தீர்வு தேவை… தரவுகளைக் குறித்த முதல்வர்!
“ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் உபரி நீர் திறக்கப்படும்போது மட்டுமே தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைப்பதும், மற்ற நேரங்களில் வறட்சியால் டெல்டா மாவட்டங்கள் காய்ந்து போவதும் தொடர்கதையாகிவிட்டது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு (Permanent Solution) எட்டப்பட வேண்டும். அதற்கு இந்தத் தீர்மானம் மிக முக்கியமான ஒரு படி” என்று கூறி சௌமியா அன்புமணி தனது உரையை நிறைவு செய்தார்.
சௌமியா அன்புமணி ஒவ்வொரு புள்ளிவிவரத்தையும், டிஎம்சி கணக்குகளையும் துல்லியமாக மேடையில் முழங்கியபோது, அவையில் இருந்த உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர். முதல்வர் விஜய் அவரது தரவுகளை மிகவும் கூர்ந்து கவனித்ததோடு, சௌமியா அன்புமணி சமர்ப்பித்த முக்கிய புள்ளிவிவரங்களைத் தனது குறிப்பேட்டில் உன்னிப்பாகக் குறித்துக்கொண்டார். எதிர்கட்சி வரிசையில் இருந்து வந்த இந்த ஆழமான, அறிவுப்பூர்வமான வாதம் இன்றைய சட்டமன்ற விவாதத்தின் தரத்தை மேலும் உயர்த்தியது.