FIFA: ஃபிஃபாவின் புதிய மரபு; இரண்டு அரிய அடையாளங்களுடன் களமிறங்கிய லூகா மோட்ரிச்!

Spread the love

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ‘Group L’ பிரிவின் ஆரம்பச் சுற்று ஆட்டத்தில், உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் கோல் அடிக்கத் தீவிரமாகப் போராடியதால் களம் அனல் பறந்தது. வலிமைமிக்க இங்கிலாந்து அணியின் முன்கள ஆட்டக்காரர்கள் குரோஷியாவின் தடுப்பாட்ட அரணைத் தங்களது மின்னல் வேக பாஸ்கள் மூலம் அடுத்தடுத்து தகர்த்து, கோல் மழையைப் பொழிந்தனர். இதற்குப் பதிலடியாக, ஜாம்பவான் லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷிய அணியும் ஆக்ரோஷமாகப் போராடி 2 கோல்களைத் திருப்பி அடித்தது. எனினும், இறுதிவரை ஆட்டத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து அணி, 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது.

லூகா மோட்ரிச்
லூகா மோட்ரிச்

இப்போட்டியில் குரோஷியாவின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான லூகா மோட்ரிச் அணிந்திருந்த தனித்துவமான ஜெர்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. களத்திலிருந்த மற்ற வீரர்களிடமிருந்து மாறுபட்டு, அவரது ஜெர்சியில் ஃபிஃபா அமைப்பால் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு பிரத்யேக சின்னங்கள் இடம்பெற்றிருந்தன.

மோட்ரிச்சின் சீருடையில் இருந்த முதல் சின்னம் FIFA Legacy Patch. உலகக் கோப்பைத் தொடர்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை பங்கேற்ற மூத்த வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் ஃபிஃபா இதனை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடும் மோட்ரிச், இதன் மூலம் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, மானுவல் நோயர் போன்ற உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

மெஸ்ஸி
மெஸ்ஸி

அவரது ஜெர்சியில் இடம்பெற்றிருந்த இரண்டாவது சின்னம் Golden Ball Winner Patch. இது 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் குரோஷியா அணியை இரண்டாம் இடத்திற்கு அழைத்துச் சென்று, தொடரின் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதை வென்ற மோட்ரிச்சின் அசாத்திய திறமையைப் பாராட்டும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மோட்ரிச்சைத் தவிர்த்து இந்த இரண்டு சின்னங்களையும் ஒன்றாக அணிந்திருக்கும் ஒரே வீரர் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *