சட்டென மழையை கொடுக்கும் சீன கட்டிடம்.. அடுத்த நொடி ஊட்டி மாதிரி கிளைமேட்.. அடங்கேப்பா செம! | China Rooftop Mist Cooling System Goes Viral as Heatwave Scorches Cities, How actually it works

Spread the love

International

oi-Vigneshkumar

பெய்ஜிங்: சீனாவின் பல பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்கு கட்டிடங்களில் வெப்பத்தைத் தணிக்க ஒரு விசித்திரமான மற்றும் புதுமையான வழியை பின்பற்றுகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த கட்டிடத்தில் இருந்து மழை கொட்டுவது போல இருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. சீனாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதற்கிடையே வெப்பத்தைத் தணிக்கச் சீனாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் வினோதமான முயற்சியை எடுத்துள்ளனர்.

China Rooftop Mist Cooling System China world

மழை ஸ்ப்ரே

அதாவது வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள யுன்செங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளில் rooftop misting systems எனப்படும் ஸ்ப்ரே பொருத்தப்பட்டுள்ளன. இவை காற்றில் மிக நுண்ணிய நீர்த்துளிகளைப் பனிமூட்டம் போல் தெளித்து, சுற்றுப்புற வெப்பத்தைக் குறைக்கிறது. இது மக்களுக்குக் கடுமையான வெப்பத்திலிருந்து சற்று நிம்மதியை கொடுக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கட்டிடங்களின் கூரைகளில் இருந்து பனிமூட்டம் போல தண்ணீர் கீழே இறங்கி வந்து, தெருக்களையும் நடைபாதைகளையும் குளிர்விக்கும் காட்சிகள் கவனத்தை ஈர்த்துள்ளன. பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நகரங்கள் எப்படி தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.

எப்படி வேலை செய்கிறது

evaporative cooling என்ற முறையில் இது வேலை செய்கிறது. கட்டிடங்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர் அழுத்த ஸ்ப்ரேக்கள் மிக நுண்ணிய நீர்த்துளிகளைக் காற்றில் தெளிக்கின்றன. இந்த துளிகள் காற்றில் ஆவியாகும்போது, அவை காற்றில் உள்ள வெப்பத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால்.. எப்படி நமது உடலில் வெளிப்படும் வியர்வை ஆவியாகி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறதோ.. அதேபோல தான் இதுவும் வேலை செய்கிறது.

வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும்போது கூட, இந்த அமைப்பின் மூலம் ஓரிரு நிமிடங்களிலேயே அப்பகுதியின் வெப்பத்தை 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியுமாம். இந்த முறையில் தெளிக்கப்படும் நீர்த்துளிகள் சைஸில் மிகச் சிறியவை என்பதால்.. அவை வெப்பமான மற்றும் வறண்ட சூழ்நிலையில் மிக வேகமாக ஆவியாகிவிடுகின்றன. இதன் காரணமாகப் பாதசாரிகளோ அல்லது சாலைகளோ நனைவதில்லை. குளிர்ச்சியான காற்று மட்டுமே பரவுகிறது.

ஏசி

மேலும், வழக்கமான ஏசி போன்ற சாதனங்களுடன் ஒப்பிடும்போது, இந்த அமைப்புக்கு மிகக் குறைந்த மின்சாரமே தேவைப்படுகிறது. ஏனெனில் இதற்கு தண்ணீர், பம்புகள் மற்றும் உயர் அழுத்த ஸ்ப்ரே மட்டுமே தேவைப்படுகின்றன. வெப்பம் குறைவதால் கட்டிடங்களுக்குள் வெப்பம் ஊடுருவுவதைத் தடுத்து, உட்புறங்களையும் இது குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஏற்கனவே பல சீன நகரங்களில் பூங்காக்கள், பொதுச் சதுக்கங்கள், நடைபாதை வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் இதுபோன்ற அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றதாம்.

வெப்ப அலைகள்

பருவநிலை மாற்றம் காரணமாக சீனாவில் அண்மைக் காலமாக அடிக்கடி வெப்ப அலைகள் வீசி வருகின்றன. குறிப்பாக உயர்ந்த கட்டிடங்களில் வெப்பம் அதிகரிக்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக ஏசி வசதி இல்லாத வீடுகளுக்கு இந்த தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இதனால் தண்ணீர் வீணாகலாம் என்று சில நிபுணர்களால் கேள்வி எழுப்பியிருந்தாலும், நீர்த்துளிகள் உடனடியாக ஆவியாகிவிடுவதால் மிகக் குறைந்த அளவிலான தண்ணீரே இதற்குப் பயன்படுத்தப்படுவதாக ஆதரவாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *