சபரிமலை: “முன்பதிவு செய்த தேதியில் வாருங்கள்” பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆனந்த் விளக்கம் | Sabarimala pattanamthitta SP Anand explains security arrangements

Spread the love

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலப் பூஜைகளுக்காகக் கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான நேற்று அதிகாலை முதல் புதிய மேல்சாந்திகள் பூஜைகளை நிர்வகித்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளைப் போன்று பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பத்தனம்திட்டா எஸ்.பி., ஆனந்த் கூறுகையில், “சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்யும் பொருட்டு, கோயில் வளாகம் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பா மற்றும் நிலக்கல் ஆகிய பகுதிகளில் மொத்தம் 3,700 சீருடைப் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பகுதியிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கமாண்டோ படைப் பிரிவினர், விரைவுப் படை மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டோர் இணைந்து மொத்தம் 5,000 பேர் முழுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலக்கல் பகுதியில் நவீன செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலக்கல்லில் வாகன நிறுத்துமிட வசதி குறைவாக இருந்ததாலும், முறையற்ற வாகன நிறுத்தங்களால் பெருமளவிலான நெரிசல் ஏற்பட்டது. தற்போது பார்க்கிங் மைதானங்கள் முழுமையாகத் தரம் உயர்த்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு கேமராக்களின் உதவியுடன் தானியங்கு வாகன நிறுத்துமிடம் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பம்பாவில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர் இல்லை. அங்கிருந்து நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஸ்பாட் புக்கிங் செய்ய விரும்பும் பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் ஜெர்மன் ஷெட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பம்பா பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதி மிகக் குறைவாகவே உள்ளது.

14 இருக்கைகளுக்கு மேற்பட்ட பெரிய வாகனங்கள் பயணிகளை இறக்கிவிட்டு உடனே திரும்பிச் செல்லும் முறையே அமலில் உள்ளது. பெரிய வாகனங்கள் நிலக்கல்லில்தான் கண்டிப்பாக பார்க்கிங் செய்ய வேண்டும். நிலக்கல்லில் மின் விளக்குகள், பக்தர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான அனைத்துத் தேவைகளையும் தேவஸ்வம் போர்டு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டு நாளொன்றுக்கு 80,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்வம் போர்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதில் 66,000 பேர் இணையவழி முன்பதிவு மூலமாகவும், 14,000 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் தரிசனம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இணையவழி முன்பதிவு செய்த 66,000 பக்தர்கள் நிலக்கல் வழியாகவும், எருமேலி வழி மற்றும் சத்திரம் – புல்மேடு ஆகிய மூன்று மலைப் பாதைகள் மூலமாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த மூன்று பாதைகளிலும் பயணிக்க முறையான வரம்புகளும் ஒதுக்கீடுகளும் உள்ளன. அந்த வரம்புகளுக்கு உட்பட்டே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு எந்தத் தேதியில் முன்பதிவு செய்கிறீர்களோ அதே தேதியில்தான் தரிசனத்திற்கு வர வேண்டும். வேறு நாட்களில் வந்தால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படும். இது உங்களுக்கும், உங்களைப் போன்ற மற்ற பக்தர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *