ஐப்பசி முடிந்து கார்த்திகை மாதம் பிறக்கும்போது மாலை அணிவது, மண்டல காலம் ஆகியவை குறித்த கேள்விகள் ஒவ்வோர் ஆண்டும் எழுகின்றன. புதிதாக மாலை அணிபவர்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கும்.
அதிலும் கார்த்திகை முதல் தேதி மாலை அணியும் மரபு உண்டு. ஏன் கார்த்திகை முதல் தேதி? மண்டல காலம் என்பது எவ்வளவு நாள்கள்? விரத காலம் என்பது எத்தனை நாள்கள் என்னும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்ரமணியன்.
“ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதப்பிறப்பை ஒட்டியே நடை திறந்திருக்கும் சபரிமலை கார்த்திகை முதல் தை மாதம் முதல் வாரம் வரை (ஜனவரி 20) திறந்திருக்கும். இடையில் பிறகு மூன்று, நான்கு நாள்கள் மட்டுமே நடை சாத்தப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள்.
கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்தால் அவர்கள் மகர ஜோதிக்குத்தான் மலைக்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்பவர்கள்தான் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவார்கள். இதுதான் மரபும். அப்படியானால் பொதுவாக எவ்வளவுநாள்கள் ஒருவர் மாலையணிந்து விரதம் இருக்க வேண்டும் என்கிற கேள்வி தோன்றும்.

இதில் பல வழக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள் என்ற மரபைக் கடைப்பிடிக்கிறோம். கேரளத்தில் ஒரு மண்டலம் என்பது 41 நாள்கள். ஆனால் புராண மரபில் பகவான் அதுவும் “மூன்று பட்சம் விரதம் இருக்க வேண்டும்’ என்கிறார். ஒரு பட்சம் என்றால் 15 நாள்கள், எனவே மூன்று பட்சம் 45 நாள்கள் குறைந்தபட்சம் விரதம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் பரவாயில்லை என்றே சொல்கிறது சாஸ்திர நூல்கள்.
அடுத்த கேள்வி, இந்தக் கணக்கு எதுவரை என்பதுதான். அதாவது, சாமி தரிசனம் வரையிலோ, நெய்யபிஷேகம் வரையிலோ அல்ல. மாலை அணிந்த நாளிலிருந்து இருமுடி கட்டும் நாள் வரைதான். ஒருவர் 45 நாள்கள் விரதம் பூர்த்தியான பிறகு இருமுடி கட்டிப் புறப்பட வேண்டும் என்பது விதி.