சம்பளப் பிரச்னை; போர்க்களமாக மாறிய நொய்டா; போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்கள் கைது

Spread the love

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் மாருதி காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் அதிக அளவில் இருக்கின்றன. இதுதவிர நொய்டா மற்றும் காசியாபாத்தில் அதிக அளவில் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நொய்டாவில் உள்ள ஒரு கம்பெனியின் கிளை கம்பெனி ஹரியானாவில் இருக்கிறது. அந்தக் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளத்தை ஹரியானா அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகரித்தது. இதனால் இரண்டு இடங்களுக்கும் இடையேயான சம்பள விகிதம் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது.

எனவே இது தொடர்பாக நொய்டா தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே புகைச்சல் இருந்துகொண்டே இருந்தது. இத்தொழிற்சாலையில் தனியாக தொழிலாளர் சங்கம் கிடையாது. திடீரென நேற்று தொழிலாளர்கள் முழு அளவில் சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டத்தில் தொழிலாளர்கள்
போராட்டத்தில் தொழிலாளர்கள்

அவர்களுடன் மற்ற தொழிற்சாலை ஊழியர்களும் ஈடுபட்டனர். இதனால் டெல்லியையொட்டி இருக்கும் நொய்டா மற்றும் காஜியாபாத் பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது.

தொழிலாளர்கள் நொய்டா தொழிற்பேட்டை பகுதியில் வாகனங்களை தீவைத்து எரித்தனர். நொய்டாவின் 80 இடங்களில் பல்வேறு கம்பெனிகளில் பணியாற்றும் 40 முதல் 45 ஆயிரம் தொழிலாளர்கள் தாங்களாகவே சம்பள உயர்வு கோரி இப்போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் கற்களை வீசித்தாக்குதல் நடத்தினர். செக்டர் 63-ல் பூட்டியிருந்த ஒரு தொழிற்சாலையின் கேட்டைத் திறந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர். அக்காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கிறது. நொய்டா முழுவதும் கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், போலீஸார் 300 பேரைக் கைது செய்தனர்.

போராட்டத்தில் வெளியாட்கள் ஊடுருவியிருப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து கௌதம் நொய்டா காவல் ஆணையர் லட்சுமி சிங் கூறுகையில்,”தொழிலாளர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்ற பிறகு, மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வந்த ஒரு குழுவினர் அண்டை மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் நுழைந்தனர். அவர்கள் அப்பகுதிகளில் சுற்றித் திரிந்து, பதற்றத்தைத் தூண்டி வன்முறையைத் தூண்ட முயன்றனர். இந்தக் குழுவைச் சேர்ந்த சிலரை நாங்கள் காவலில் எடுத்துள்ளோம், மற்றவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளோம்”என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவே தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தொழிலாளர் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு வாட்ஸ் ஆப் குரூப்களை உருவாக்கி அதில் நொய்டாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை QR CODE மூலம் சேர்த்துள்ளனர் என்று போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானுக்குத் தொடர்பு

இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக உத்தரப்பிரதேச அமைச்சர் அனில் ராஜ்புர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,” இந்த வன்முறை நன்கு திட்டமிடப்பட்ட சதியாகும். இப்பகுதியில் அண்மையில் நடந்த பயங்கரவாதம் தொடர்பான கைதுகளின் பின்னணியில், இதற்கு பாகிஸ்தானின் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தச் சம்பவம் நடத்தப்பட்டதாகத் தோன்றுகிறது.

சமீப நாட்களில் மீரட் மற்றும் நொய்டாவில் நான்கு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களுக்குப் பாகிஸ்தானில் உள்ள கையாட்களுடன் தொடர்பு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், மாநிலத்தில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கச் சதி நடந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து புலனாய்வு முகமைகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன,” என்று ராஜ்பர் கூறினார்.

சம்பளம் அதிகரிப்பு

தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தைத் தொடர்ந்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனே நொய்டா மற்றும் காசியாபாத் பகுதியில் செயல்படும் கம்பெனிகளின் உரிமையாளர்களை அழைத்து சம்பள உயர்வு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் பயிற்சி இல்லாத தொழிலாளர்களின் சம்பளம் 11,313 லிருந்து 13,690 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் இன்றும் காலையில் தொழிலாளர்கள் கல்வீச்சுத்தாக்குதலில் ஈடுபட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *