இதுதொடர்பாக பல ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து கிடைக்கும் முடிவுகள் என்னவெனில், 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது. காலையா, மாலையா என்பது உங்கள் வசதியைப் பொறுத்தது. வெறும் வயிற்றில் நடக்கக் கூடாது. அதேபோல் அதிகம் சாப்பிட்ட பிறகும் நடக்கக் கூடாது. வாரம் முழுவதும் நடக்க வேண்டுமா என்கிற கேள்விக்கு வாரத்தில் 5 நாள்கள் கட்டாயம் நடக்க வேண்டுமென்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2 நாள்கள் நடைப்பயிற்சியைத் தவிர்த்தால் அவை அடுத்தடுத்த நாள்களாக இருக்கக் கூடாது. தொடர்ச்சியாக 2 நாள்கள் இயக்கமில்லாமல் இருப்பது சரியானது அல்ல. திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை நடைப்பயிற்சி செய்துவிட்டு சனி, ஞாயிறு என அடுத்தடுத்த 2 நாள்கள் இடைவெளி விடுவது தவறானது.
வேகமாக நடக்க வேண்டுமா, நிதானமாக நடக்க வேண்டுமா என்கிற சந்தேகத்துக்கும் நிபுணர்கள் சொல்கிற பதில், நீங்கள் நடப்பதை நீங்களே உணர்ந்து நடக்க வேண்டும். எந்திரத்தனமாக நடக்கக் கூடாது. நண்பர்களுடன் டீக்கடைக்கு செல்வது போலவோ, குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வது போலவோ ரொம்பவும் ரிலாக்ஸ்டாகவும் நடக்கக் கூடாது. நடக்கிறோம் என்கிற முழுமையான உணர்வுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரே வேளையில் 30 நிமிடங்களும் நடக்க முடியாது என்கிறவர்கள் நேரம் கிடைக்கும்போது நடந்து அந்த 30 நிமிடங்களை ஈடுகட்டலாம். காலையில் 15 நிமிடங்கள் நடந்தால் மாலையில் 15 நிமிடங்கள் நடப்பதும் போதுமானது.
நீரிழிவாளர்களில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது என சிலருக்கு அறிவுறுத்தப்படுவதுண்டு. சர்க்கரை நோயினால் காலில் ஏதேனும் பாதிப்பு இருக்கும்பட்சத்திலும், காலில் புண் இருக்கும்பட்சத்திலும், பார்வை மங்கலாக இருக்கிறவர்களும், கர்ப்பகாலத்திலும், அதிக ரத்த அழுத்தம் இருக்கும்போதும் நடைப்பயிற்சியைத் தவிர்க்கலாம். இதற்கு பதிலாக வீட்டிலேயே யோகா, தியானம் போன்ற எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.