கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ஆகஸ்ட் 08 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட நயன்தாரா, திரைப்பட விழாக்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தான் வேண்டுமென்றே தவிர்ப்பதாக நினைக்க வேண்டாம் என்று விளக்கம் அளித்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தான் அதிகம் வசதியாக உணரவில்லை என்பதாலேயே அவற்றில் இருந்து விலகி இருப்பதாக கூறினார்.
அதேவேளையில், ‘டாக்ஸிக்’ தனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம் என்றும், குறிப்பாக யஷ் அழைத்ததால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்ததாகவும் நயன்தாரா தெரிவித்தார். யஷின் ஒரு தொலைபேசி அழைப்பே நிகழ்ச்சிக்கு வருவதற்கு போதுமானதாக இருந்ததாக அவர் கூறியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், இயக்குநர் கீது மோகன்தாஸுடனான தனது நீண்டகால நட்பு, படப்பிடிப்பு அனுபவம் உள்ளிட்டவற்றையும் நயன்தாரா பகிர்ந்து கொண்டார். கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா, ஹூமா குரேஷி ஆகியோரையும் மேடையில் பாராட்டிப் பேசினார்.
யஷ் குறித்து பேசியபோது, அவரது கடின உழைப்பு மற்றும் படத்திற்காக அவர் அர்ப்பணித்த காலம் குறித்து நயன்தாரா வெகுவாக புகழ்ந்தார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், கணவர், தந்தை என பல்வேறு பொறுப்புகளையும் சிறப்பாக கையாள்வதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இதற்கிடையே, நயன்தாராவின் இந்தப் பேச்சுதான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. குறிப்பாக, முன்னணி தமிழ் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்காமல் இருந்த நிலையில், யஷ் அழைத்ததால் மட்டும் கலந்து கொண்டதாக அவர் கூறியிருப்பது சில ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தபோதும், அந்தப் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் நயன்தாரா பெரும்பாலும் இடம்பெறாததை சுட்டிக்காட்டி சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். “அழைப்பு இல்லாததால்தான் வரவில்லை என்றால், முன்னணி நடிகர்களின் படங்களிலும் அழைப்பு கொடுத்திருக்க வேண்டுமா?” என்ற வகையிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட படத்தின் மீதான தனிப்பட்ட விருப்பம் அல்லது படக்குழுவினருடனான உறவு காரணமாக நயன்தாரா நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாம் என்றும் அவருக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், ‘டாக்ஸிக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா பேசிய சில வார்த்தைகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தாண்டி தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

