International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறைக்கப்பட்டு, ராணுவத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது முக்கியம் மாற்றமாக அங்குள்ள அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடு முழுவதுமாக ராணுவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே ஆண்டில் சுதந்திரம் அடைந்தாலும் கூட பாகிஸ்தானின் நிலை இன்னும் மோசமாகவே இருக்கிறது. இந்தியா அளவுக்கு பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி எதையும் பதிவு செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணமே அங்கு ஜனநாயக குரல் நசுக்கப்பட்டு ராணுவத்தின் கை ஓங்கியது தான். கடந்த காலங்களில் அங்கு பல முறை ராணுவ ஆட்சி வந்துள்ளது. அது தான் பாகிஸ்தான் வளர்ச்சியை படுகுழியில் தள்ளியது.

பாகிஸ்தான்
ஆனால், இந்த தவறுகளில் இருந்து பாகிஸ்தான் படம் கற்றதா என கேட்டால்.. இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அங்கு ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. ஷெரீப் அரசின் அதிகாரங்கள் படிப்படியாக ராணுவத்திற்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. அப்படி தான் இப்போது அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடும் முனீர் தலைமையிலான ராணுவம் கைக்கு சென்றுள்ளது.
புதிய அமைப்பு
இதற்காக என்எஸ்சி அதாவது National Strategic Command என்ற புதிய அமைப்பையும் உருவாக்கியுள்ளனர். அணு ஆயுதங்கள் மற்றும் ராணுவ சொத்துகள் தொடர்பான கண்ட்ரோல் முழுமையாக அந்த அமைப்பிற்கே போகுமாம். இதற்கு முன்பு வரை அங்கு என்சிஏ (National Command Authority) எனப்படும் அரசின் அமைப்பிற்கே அதிகாரம் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அதன் அதிகாரத்தை குறைத்துவிட்டனர்.
பிரதமருக்கான அதிகாரமும் இதில் மிக பெரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. தகவல்களை பெறும் அளவுக்கு மட்டுமே பிரதமருக்கு அதிகாரம் இருக்கும். அவரால் முடிவுகளை எடுக்க முடியாது. இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் முழுமையாக ராணுவ கட்டமைப்பின் கீழ் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடு முழுமையாக ராணுவம் பக்கம் போய் இருக்கிறது.
அசிம் முனீர்
பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர் தான் இந்த மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். சீனாவில் இருப்பது போன்ற ஒரு செட் அப்பை உருவாக்க அவர் முயல்வதாக தெரிகிறது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு அதிகாரம் இல்லாமல் போகும். இது மெல்ல சர்வாதிகாரத்தை நோக்கியே மீண்டும் அரசை நகர்த்தும். அசிம் முனீரின் திட்டமும் கூட அதுவாகவே இருக்கும் என தெரிகிறது. மெல்ல பாகிஸ்தானை தனது கண்டரோலில் எடுக்கவே அவர் காய்களை நகர்த்தி வருகிறார்.
பாகிஸ்தான்
உலகிலேயே மிகவும் கொடூரமான ஆயுதங்களில் ஒன்றாக அணு ஆயுதங்கள் கருதப்படுகின்றன. இரண்டாம் உலகப்போரின் போது, 1945இல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு தாக்குதலை நடத்தியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அத்தோடு மட்டுமின்றி கதிர்வீச்சு பாதிப்பு பல தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்தன. இப்போது உலகில் 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் உள்ளன.
எப்போதுமே அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்க வேண்டும். அது ராணுவம் அல்லது சர்வாதிகாரத்திடம் சென்றால் விபரீதங்கள் நடக்கும் ஆபத்து அதிகமாகவே இருக்கிறது.


