கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியைச் சேர்ந்த முல்லா முஹம்மது – பாத்திமா ஆகியோரது மகன் அப்துல் ரஹீம். அப்துல் ரஹீமின் தந்தை முல்லா முகம்மது மரணமடைந்துவிட்டார். 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி அப்துல் ரஹீம் சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றார்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்குச் சேரும்போது அப்துல் ரஹீமுக்கு 26 வயது ஆகியிருந்தது. ரியாத்தைச் சேர்ந்த அப்துல்லா அப்துரஹ்மான் அல்ஷாஹ்ரியின் மகனான அனாசி அல்ஷாஹ்ரி என்ற 15 வயது சிறுவனை பராமரிப்பது அப்துல் ரஹீமுக்கு வேலையாக இருந்தது.
சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரி-க்கு கழுத்துக்கு கீழ் உள்ள பகுதிகள் செயல்படாமல் இருந்தது. சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வீல் செயர் மூலமும், காரிலும் சிறுவனை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அப்துல் ரஹீம்தான் அந்த சிறுவனை காரில் வெளியில் அழைத்துச் சென்று வந்துள்ளார்.
2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி ரியாத் ஷிஃபா-வில் உள்ள வீட்டில் இருந்து அஸீஸி-யில் உள்ள ஃபாண்டா ஹைப்பர் மார்க்கெட்டுக்கு சிறுவனை அழைத்துச் சென்றார் அப்துல் ரஹீம். காரின் பின் சீட்டில் சிறுவன் அமர்ந்திருந்திருக்கிறான். போகும் வழியில் ட்ராபிக் சிக்னலை மீறி காரை ஓட்டிச் செல்லும்படி சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரி கூறியிருக்கிறார்.
ஆனால், அப்துல் ரஹீம் சிக்னலை மீறாமல் காத்திருந்தார். இதனால் சிறுவன் பின் சீட்டில் இருந்தபடி சத்தம்போட்டு பிரச்னை ஏற்படுத்தியிருக்கிறார். சிக்னலை மீறக்கூடாது எனக்கூறி புரியவைப்பதற்காக திரும்பியபோது அப்துல் ரஹீமின் முகத்தில் சிறுவன் பலமுறை எச்சில் துப்பியிருக்கிறார். அதை தடுப்பதற்காக அப்துல் ரஹீம் கையை நீட்டியபோது சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணத்தில் தெரியாமல் கை பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளான். அதை கவனிக்காமல் சிக்னல் விழுந்ததும் மீண்டும் காரை ஓட்ட தொடங்கினார் அப்துல் ரஹீம்.

தொடர்ந்து கார் ஓட்டிக்கொண்டிருந்த போது பின்பக்கம் சீட்டில் சிறுவனின் சத்தம் கேட்கவில்லையே என்று மெதுவாக திரும்பிப் பார்த்துள்ளார். அப்போது சிறுவன் சலனமற்று கிடந்ததை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் வேலைசெய்துவந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹமது நசீரை போனில் அழைத்து உள்ளார்.
முஹம்மது நசீர் அங்கு சென்ற நிலையில் இருவரும் என்ன செய்யலாம் என ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி, பணம் பறிக்க வந்த கொள்ளைக்காரர்கள் அப்துல் ரஹீமை காரில் கட்டி போட்டுவிட்டு, சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரியை தாக்கியதாக நாடகமாடினர். இதுகுறித்து போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் அப்துல் ரஹீமையும், முஹம்மது நசீரையும் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பொய்யாக நாடகமாடியது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். முஹம்மது நசீர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமினில் வெளியே வந்தார். ஆனால், அப்துல் ரஹீம் குற்றவாளி என அறிவித்த கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
கடந்த 20 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே சமயம் சிறுவனின் பெற்றோர் அப்துல் ரஹீமை மன்னித்தால் அவரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் பிளட் மணி என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் கேட்டனர்.
அதன்படி இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதுவும் 2024-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதிக்குள் அந்த தொகையை வழங்கினால்தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்துல் ரஹீமின் உயிரை காக்க சமூக சேவகர்கள் களம் இறங்கினர்.
அப்துல் ரஹீம் சட்ட உதவி டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டது. கேரளாவில் அதற்கான செயல்படுகள் நடந்தன. கேரளா மக்கள் மனமுவந்து பண உதவிகளை செய்தனர். அப்துல் ரஹீமுக்காக ஏற்படுத்தப்பட்ட வங்கிகணக்கில் உலகம் முழுவதும் உள்ள கேரள மக்கள் இணைந்து 34 கோடி ரூபாய் திரட்டி இந்தியா தூதரகம் மூலம் சவுதியில் உள்ள சிறுவனின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.