தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகள் இருந்திருக்க வேண்டிய பெயர்ப்பலகையில், கூடுதலாக இந்தி மொழியும் எட்டிப் பார்த்திருக்கிறது. அவ்வளவுதான்… இருமொழிக் கொள்கை விஷயம் மீண்டும் சூடுபிடித்துவிட்டது.
மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் சாத்தான்குளம் பகுதியில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பணிகளின் ஒரு பகுதியாக வைக்கப்பட்ட பெயர்ப்பலகையில்தான் இந்தி இடம்பெற்றிருக்கிறது. விஷயம் அரசின் கவனத்துக்குப் போக… நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் கொடுத்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கைதான் தமிழக வெற்றிக் கழகத்தின் உயிர்க் கொள்கை என்றும், அதிலிருந்து அரசு ஒருபோதும் மாறாது என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் இந்தி எப்படி வந்தது?
துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், சில அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் இருமொழிக் கொள்கைக்கு மாறாக மூன்று மொழிகளில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர், உதவிக் கோட்டப் பொறியாளர் என இரண்டு அதிகாரிகளும் அக்டோபர் 1-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தி இடம்பெற்ற அந்தப் பெயர்ப்பலகையும் உடனடியாக அகற்றப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புதிய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, போர்டில் மூன்றாவது மொழி வந்தது… விசாரணை நடந்தது… இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்… போர்டும் மாற்றப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கொள்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் செயல்பட்டால், சட்டப்படியும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதவ் அர்ஜுனா எச்சரித்துள்ளார்.
“மும்மொழிக் கொள்கை எந்த வடிவத்தில் வந்தாலும் முறியடிப்போம்; இருமொழிக் கொள்கையை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாலையில் வைக்கப்பட்ட ஒரு பெயர்ப்பலகைதான்… ஆனால், அதில் இருந்த ஒரு மொழி அரசின் கொள்கை வரை சென்று, இரண்டு அதிகாரிகளின் சஸ்பெண்ட் வரை கொண்டு சென்றிருக்கிறது.

