Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: குஜராத் அணியில் இருந்து சாய் கிஷோர் சிஎஸ்கே அணிக்கு வர வேண்டுமென்றால், அவரின் மனது வைக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் எனக்கு விளையாட வாய்ப்பு இல்லை என்று சாய் கிஷோர் கூறிவிட்டு, என்னை ரிலீஸ் செய்துவிடுங்கள் என்று கேட்டு கொண்டால் மட்டுமே இந்த டிரேட் சாத்தியம் என்று கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியில் இந்திய ஸ்பின்னருக்கான தேவை அதிகளவில் உள்ளது. அகீல் ஹொசைன் மற்றும் நூர் அஹ்மது ஆகிய இருவருமே வெளிநாட்டு வீரர்கள் என்பதால், சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. இதனால் ஒரு இந்திய ஸ்பின்னர் இருந்தால், பிளேயிங் லெவனை கட்டமைக்க முடியும் என்று கருதுகிறது. இதனால் ஜடேஜாவின் இடத்தை நிரப்ப இடதுகை ஸ்பின்னரான சாய் கிஷோரை டிரேட் செய்ய சிஎஸ்கே விரும்புகிறது.

சாய் கிஷோர் தற்போது குஜராத் அணிக்காக ஆடி வருகிறார். ஆனால் குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் அவர் விளையாட வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் ரஷித் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விடுகின்றனர். அதேபோல் மானவ் சுதார் அடுத்தக் கட்ட பட்டியலில் இருக்கிறார். இதனால் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது கிட்டத்த உறுதி.
இதனால் சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே கருதுகிறது. இதுதொடர்பாக அஸ்வின் பேசுகையில், சாய் கிஷோரை குஜராத் அணி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் குஜராத் அணிக்கு மிடில் ஆர்டர் பிரச்சனை உள்ளது. பட்லர் காயத்தில் இருக்கிறார். இதனால் பிரெவிஸ் போன்ற ஒரு வீரரை கொடுக்க சிஎஸ்கே முன் வந்தால், சாய் கிஷோரை விட்டுக் கொடுக்கும்.
அந்த அணி ஏன் சிஎஸ்கே பற்றி கவலைப்பட வேண்டும். இந்த டிரேட் நடக்க வேண்டுமென்றால், அதற்கு சாய் கிஷோர் மனது வைக்க வேண்டும். அவர் குஜராத் அணியின் நிர்வாகத்திடம் பேசினால் மட்டுமே, டிரேட் பேச்சுவார்த்தை நடக்கும். 70% சாய் கிஷோர் கையில் மட்டுமே டிரேட் முடிவு உள்ளது. அப்போதும் கூட குஜராத் அணி நிர்வாகம் நினைக்க வேண்டும்.
சிஎஸ்கே பிளேயிங் லெவனில் விளையாட எனக்கு வாய்ப்பு உள்ளது என்பதை எல்லாம் சொல்லி புரிய வைத்து, என்னை விட்டு விடுங்கள் என்று கேட்க வேண்டும். அதனை விடுத்து சாய் கிஷோரை ரிலீஸ் செய்ய வாய்ப்பே இல்லை. வெறும் பணத்திற்காக மட்டும் குஜராத் அணி ஒரு வீரரை டிரேட் செய்யுமா என்பது சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார்.