
பணத்துக்குன்னு இல்லாம பழக்கத்துக்காக கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குள்ள வர்றதெல்லாம் நம்ம ஊர் பயலுவதாம்பே. விசுவாசம், விசுவாசம்னு இருந்துட்டு வாழ்க்கைய வீணடிச்சுக்குறீக’ – தமிழ் சினிமாவின் போக்கை திருப்பிப் போட்ட ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் ஜீவநாடியே இந்த டயலாக்தான். ரீலில் மட்டும் இல்லாமல் ரியலாகவே இப்படி பல கொலையாளிகளை தமிழகம் பார்த்துள்ளது. நண்பனுக்காக கத்தியை தூக்கிவிட்டு பின் ரத்தமும் ஜெயிலுமே வாழ்க்கையாகிப் போய், கடைசியில் நாதியில்லாமல் நடுரோட்டில் கொல்லப்பட்டு கிடக்கும் கிரிமினல்களின் லிஸ்ட் நீளம்!
அதில் முக்கியமானவர், திருச்சியில் பிறந்து தமிழகத்தையே தன் அட்ராசிட்டியால் திணறடித்த ‘கொம்பன்’ ஜெகன். இப்படியெல்லாமா ஒரு ரவுடி உருவாகி, தாதாவாக தலையெடுத்து, தறிகெட்டு ஆடி, தடாலடியாக கொல்லப்பட முடியும் என்று அதிர்ச்சி கலந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது இவரது கில்லர் ஹிஸ்டரி.
கொம்பன் கதையைக் கேட்க திருச்சியின் ரிட்டயர்டு டி.எஸ்.பி. ஒருவரை சந்தித்தோம். மலைக்கோட்டை படிகளில் நடந்தபடியே விவரிக்கத் தொடங்கினார்… “எஞ்சினியரிங் படிச்சவன் எடுபட்ட கொலகாரனா மாறுனதை கேள்விப்பட்டிருக்கிங்களா? அவன்தான் கொம்பன் ஜெகன். இங்கே திருவெறும்பூர் பக்கம் சர்க்கார்பாளையம் அடுத்த பனையகுறிச்சிதான் அவன் சொந்த ஊரு உண்மையான பெயர் ஜெகதீசன். நண்பனுங்க வட்டாரத்துல ஜெகன்.
எந்த அப்பா, அம்மாவும் தன் புள்ளை ரவுடி ஆகணும்னு நினைச்சு வளர்க்குறதில்லைதான். ஆனால் வளர வளர அவன் எப்படியிருக்கிறான். என்னவா நடந்துக்குறான்னு பார்த்து ஒழுங்குபடுத்தியிருக்கணும் அப்படி இல்லாம தண்ணி தெளிச்சு விட்டதோட விளைவுதான் சில உயிர்களை உருவிட்டு, தன் உயிரையும் காவு கொடுத்தான் ஜெகன்.
தரமான ஸ்கூல்லதான் அவனை படிக்க வெச்சிருக்காங்க. பக்காவான கபடி பிளேயரா உருவாகியிருக்கான். கபடி. கபடின்னு மூச்சடக்கி பாடிட்டு போயி லாகவமா எதிர் டீமை தொட்டு அடிக்கிற தாட்டியத்தை வெளியிலேயும் காட்டியிருக்கான். சின்ன பிரச்னைனாலும் சட்டுன்னு கை நீட்டிடுற புத்தி. இவனோட முரட்டுத்தனத்தை கேடயமா பயன்படுத்திட்டு இவன் பின்னாடி ஒரு டீம் உருவாகி ஆட்டம் போட்டிருக்கு. அதேமாதிரி இவனுக்கு எதிராவும் சில டீம் ஸ்கூல் லெவல்லேயே உருவாச்சு. இதுல இவனோட மாமன் டைமண்ட் பாலு ஒரு அராத்து பேர்வழி, அந்தாளு பிரபல தாதா குணாவுக்கு நெருக்கமா இருந்ததால ஏரியாவுல அவனுக்கு பலர் பயப்படுவாங்க. மாமனுக்கு இருக்குற கெத்த பார்த்துட்டு, தானும் அப்படி மாஸா மாறணும்னு நினைச்சு நினைச்சே ரவுடிப்பயலா உருவெடுத்திருக்கான்.
ஒரு தடவ, கபடிப் போட்டியில ஏதோ பிரச்னை. நண்பனுக்காக சட்டுன்னு இறங்கி ஆயுதத்தைக் காட்டி மிரட்டியிருக்கான். அதுதான் அவன் சந்திச்ச முதல் வழக்கு அதுவும் கொலை மிரட்டல் வழக்கு அப்ப அவன் வயசு வெறும் 17 தான். இது அவனுக்கு கூடுதல் போதைய கொடுக்க, லோக்கல் சண்டியராவே அடையாளப்படுத்திக்க ஆரம்பிச்சான்.
பட்டாகத்தியை தொடும் பழக்கம் இருந்தாலும் ஜெகன் படிப்புலேயும் குறியா இருந்திருக்கான். எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படிச்சிருக்கான், அவன் ஏரியா நண்பர்கள் வட்டாரத்துல யாருக்கு பிரச்னைனாலும் இவனைத்தான் கூப்பிடுவாங்க. இவனும் வஸ்தாதுவா போய் நின்னு வாலாட்டியிருக்கான். இதனால் ரெகுலரா வழக்குகள்ல இருந்துட்டே இருந்தவனை போலீஸ் கூப்பிடுறதும், விசாரிக்குறதுமா இருந்துட்டே இருந்துச்சு. இதனால இவனோட தாய்மாமன் இவனை குணா, பாம்புக்குட்டி உள்ளிட்ட சில ரவுடிகளிடம் அழைச்சுட்டு போயி அறிமுகப்படுத்தி வெச்சு என் மச்சான கொஞ்சம் பாதுகாப்பா பார்த்துக்குங்க எனக்கடுத்து அவன் தான்’ன்னு சொல்லியிருக்கான். எவ்வளவு நல்ல மாமன்னு பார்த்துக்குங்க.
சுத்தி சுத்தி ரவுடிங்க சகவாசத்துல, தாட்டியக்காரனா வளர்ந்த ஜெகனோட க்ரைம் கிராப் 2010ல் இருந்து ரொம்ப பெருசாகுது. அடுத்த மூணு வருடங்களில் ஏகப்பட்ட வழக்குகளில் சிக்குனான். 2014ல் திருச்சி சீனிவாச நகரில் கல்லூரி மாணவன் ஒருத்தன், காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டான். இதில் ஜெகனை முக்கிய குற்றவாளியா தூக்குச்சு போலீஸ். ஜெகனுக்கு முதல் கொலை வழக்கு இந்த கேஸ்ல உள்ளே போயிட்டு வந்த பிறகு போலீஸ் அவனை ஜஸ்ட் ரவுடி அடையாளத்துக்காக கொம்பன்’ ஜெகன்னு பேர் வைக்க அதுவே எஸ்டாபிளிஸ் ஆகிடுச்சு.
இதன் பிறகு வரிசையாக கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்கு, மிரட்டல் மற்றும் கட்டப்பஞ்சாயத்துன்னு சிக்கிட்டே இருந்தான் ஜெகன். ஜெயிலுக்குள்ளே போறப்பல்லாம் பல மாவட்ட ரவுடிங்க, தாதாக்களை சந்திச்சு நெருக்கமானான். இளம் ரத்தம் ஆனாலும் கூட அனுபவசாலி மாதிரி ஸ்கெட்ச் போட்டு இவன் பண்ற கிரிமினல்தனங்களை பார்த்துட்டு, பெரிய தாதாக்களே இவன்கிட்ட ‘அவனை முடி, இவனை முடிச்சுவிடுன்னு சில ரவுடிங்களை கொல்லச் சொல்லி அசைன்மென்ட்ஸ் கொடுத்தாங்க. இதில் சில சம்பவங்களை நேரடியாவும், பல சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டும் கொடுத்தான் ஜெகன். அடுத்தடுத்த வருட வாக்கில் தன்னோட நெருங்கிய நண்பன் கொலைக்கு பழிக்குப் பழியாக இவன் ஸ்கெட்ச் போட்டு, களமிறங்கினான். சசிக்குமார், மணி, சக்திவேல்ன்னு அடுத்தடுத்து படுகொலையானாங்க.
கொலை, கொலை முயற்சின்னு மட்டுமில்லாமல் தன்னோட பணத் தேவைக்காக உருட்டல், மிரட்டல்னு கட்டப்பஞ்சாயத்துகள் பல பண்ணினான். வெளிநாடுகள்ல இருந்து தங்கம் கடத்திட்டு வர்ற குருவிகளை குறிவெச்சு தாக்கி, அவங்கட்ட இருந்து தங்கம், காஸ்ட்லி போதைப் பொருட்களை பறிக்கிறதை வழக்கமா வெச்சிருந்தான் ஜெகன். திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி இந்த சம்பவங்கள்ல ஜெகன் மேலே புகார் கொடுக்க முடியாம இருந்தாங்க அதே நேரத்துல அவனை போட்டுப் பொளக்கவும் பெரிய டீம் உருவாயிட்டே இருந்துச்சு.
இளம் வயசு ரவுடிங்கிறதாலே ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மாதிரி சோஷியல் மீடியாவில் தன்னை பிரபலப்படுத்திக்கிற புத்தி ஜெகனுக்கு ரொம்பவே உண்டு. இவனை விதவிதமான கெட் அப்ல போட்டோ, வீடியோ எடுத்து இன்ஸ்டாவுல போடுறதுக்குன்னே சின்ன பசங்க டீம் ஒன்றை தன் கூடவே வெச்சிருந்தான். போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக்குப் போறது, வர்றது. கோர்ட்ல ஆஜராகுறதுன்னு எல்லாத்தையுமே அப்லோடு பண்ணி அட்ராசிட்டி பண்ணிட்டிருந்தானுங்க. இதுவே போஸுக்கு எரிச்சலை கொடுத்துச்சு. ஒருகட்டத்துல வெட்டு, குத்து சம்பவங்களைக்கூட சோஷியல் மீடியாவுல போட்டு வயலன்ட்டா கெத்து காட்டத் தொடங்கினான் ஜெகன். தன்னை சுத்தி நிக்கிற அடிப்பொடி அல்லக்கைகளிடம் கொல்லுறது அண்ணனுக்கு ஒரு வெளயாட்டுடா. அதை நான் ஜாலியாவே பண்றேன்’ன்னு மப்புல திமிரா பேசுவானாம்.
ஏ பிளஸ் ரவுடிங்க லிஸ்ட்ல சேர்ந்துட்ட ஜெகனோட பெயர் சேலம் செல்லத்துரை கொலை வழக்கிலே சிக்குச்சு. அடுத்து, 2020ல் அ.தி.மு.க பிரமுகர் கனகராஜை பங்க் பாபு கொன்னதுக்காக அந்த பாபுவை கொம்பன் ஜெகன் கொன்னான். இந்த கொலையை தன்னோட பெரிய பராக்கிரமமா சீன் போட்டான். இவனை விட்டு வெச்சா சரிப்படாதுன்னு சொல்லி என்கவுன்டர் லிஸ்ட்ல கொண்டு வந்துச்சு போலீஸ்.
கொஞ்சம் அசந்தாலும் போலீஸ் துப்பாக்கியால் சாவு நிச்சயம்ங்கிறதை புரிஞ்சுகிட்டு பதுங்க துவங்கினான் ஜெகன். எங்க டிபார்ட்மென்ட்டுல ஜெகனுக்கு சாதி ரீதியா எதிரிகள் அதிகம் அதே மாதிரி சாதி ரீதியா அவனுக்கு சப்போர்ட் பண்ணுன அதிகாரிகளும் உண்டு. அவங்கதான் டேய் நீ லிஸ்ட்ல வந்துட்ட ஓடி ஒளிஞ்சுக்கோ இல்லாட்டி சாவு நிச்சயமின்னு’ எச்சரிச்சாங்க.
ஐந்து முறை குண்டாஸில் சிக்கி வெளியே வந்த கொம்பன் ஜெகன், என்கவுன்டர் பயத்தால் தன் ஸ்பீடை குறைச்சுக்கிட்ட மாதிரி சீன் போட்டான். எந்த சோஷியல் மீடியா மூலமா பிரபலமானானோ அதே சோஷியல் மீடியாவுல ‘நான் திருந்தி வாழ்றேன். காவல்துறையும், மத்தவங்களும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க, என் மனைவி கர்ப்பமா இருக்கிறாங்க எங்களை நிம்மதியா வாழவிடுங்க. பொய் கேஸ் போட்டு என்னை டார்ச்சர் பண்ணினா தற்கொலை பண்ணிக்குவேன்ன்னு வீடியோ போட்டுட்டு, எங்க டிபார்ட்மென்ட்க்கு லெட்டரும் கொடுத்தான். பல உயிர்களை காவு வாங்கியவன், பலரோட கைகால்களை எடுத்தவன். திடுதிப்புன்னு நான் திருந்திட்டேன்’ன்னு சொன்னதும் விட்டுட முடியுமா? ‘நிலுவை வழக்குகளில் ஒழுங்கா ஆஜராயிட்டு, சட்டத்தை மதிச்சு ஒழுக்கமா நடந்துக்கன்னு புத்தி சொல்லி அனுப்பிய போலீஸ், ஸ்பெஷல் டீம் போட்டு அவனை வாட்ச் பண்ணுச்சு. அவனோட வாட்ஸ் ஆப் பேச்சுகள், மெசேஜ் எல்லாமே ட்ராக் ஆச்சு.
கொம்பன் ஒரு காதல் மன்னனும்கூட ஒருபக்கம் கிரிமினல்தனம் பண்ணிட்டே இன்னொரு பக்கம் காமக் களியாட்டமும் ஆடியிருக்கான்னு தனி ஃபைல் ஒண்ணு இருக்குது. அதிலேயும் கூட சில விரோதங்களை அவன் சம்பாதிச்சான்னு தகவல் உண்டு.
மே 19ம் தேதிதான் ஜெகனோட பிறந்தநாள். ‘நான் திருந்திட்டேன்’ன்னு அவன் சொன்ன 2023ம் வருஷம், தன் பிறந்த நாளை தென்மாவட்ட ரவுடிகள் 7 பேரோட சேர்ந்து கொண்டாடியிருக்கான். கொலை ஆயுதங்கள், சரக்கு கறி விருந்துன்னு அமர்க்களப்பட்ட அந்த விருந்தை பத்தி எங்க டிபார்ட்மென்ட்க்கு தகவல் வர, பறந்து போன டீம் ரவுண்டு கட்டி அத்தனை பேரையும் அள்ளிட்டு வந்து உள்ளே வெச்சாங்க. இந்த வழக்கில் பெயிலில் வந்த ஜெகனை ரொம்ப துல்லியமா எங்க டிபார்ட்மென்ட் ஸ்பெஷல் பிரிவு வாட்ச் பண்ணிட்டே இருந்துச்சு. இந்த நேரத்துல, திருச்சி மாவட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் தங்கக் கடத்தல் நடக்க அதில் இவன் மிரட்டல் பஞ்சாயத்து பண்ணியதா தெரியவர, அவனை அரெஸ்ட் செய்ய தேடத் தொடங்கினாங்க. இந்த வழக்கு மட்டும் பத்தாதுன்னு, அவன் ஆஜரே ஆகாம இருந்த நிலுவை வழக்குகள்லேயும் உத்தரவு வாங்கிட்டு வெறித்தனமா துலாவுனாங்க.
பரபரப்பான இந்த சூழல்ல, 2023 நவம்பர்ல ஒரு நாள் காலை 12 மணி வாக்கில் ‘பிரபல கிரிமினல் கொம்பன் ஜெகன் என்கவுன்டர்’ன்னு ஃபிளாஷ் நியூஸ் வந்துச்சு. சென்னை-திருச்சி ஹைவே அருகே சனமங்கலம் வனப்பகுதிக்குள்ள கொம்பன் செல்வதாக போலீஸுக்கு தகவல் கிடைத்ததாக அவர்கள் களமிறங்கியுள்ளனர். பல வழக்குகள் உள்ள நிலையில், அவனை சரணடையச் சொன்ன போது துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, பயன்படுத்தியும் அரிவாளை வைத்து போலீஸை வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது நெஞ்சிலேயே சுட்டுக் கொல்லப்பட்டான். கொம்பன் ஆட்டம் இப்படித்தான் வெறும் முப்பது வயசுலேயே அடங்கிடுச்சு.
அவன் பொணத்தை போட்டுட்டு பேசிய அதிகாரிகள், 5 கொலைகள், சுமார் பத்து கொலை முயற்சிகள், ஆட்கடத்தல், கட்டப்பஞ் சாயத்து, மிரட்டல்ன்னு 23 மாவட்டங்களில் சுமார் 54 வழக்குகள் இவர் மீது இருக்குதுன்னு விளக்குனப்ப மீடியாவே மிரண்டாங்களே. தன்னோட கிரிமினல் நண்பர்கள் நெட் ஒர்க்கை பயன்படுத்தி தமிழகம் முழுக்கவே கிட்டத்தட்ட அத்தனை மாவட்டங்களிலும் சம்பவங்களை பண்ணியிருந்தான் பொறியியல் படிச்சவன் பயங்கர பொறுக்கியானதால முடிவு இப்படித்தானே இருக்கும்” என்று முடித்தபோது மலையடிவாரம் வந்திருந்தோம்.
ஆனால், கொம்பன் ஜெகன் என்கவுன்டரில் எக்கச்சக்க கேள்விகளும் சந்தேகங்களும் புதிர்களும் எழுந்தன. அதாவது, “தமிழகத்தின் பல தொழிலதிபர்களிடம் மிரட்டல் உருட்டல் பஞ்சாயத்துகளில் கொம்பன் இறங்கியதால், பொறுமையிழந்த அவர்கள் ஒருகட்டத்தில் போலீஸை இன்ஃப்ளூயன்ஸ் செய்து இந்த என்கவுன்டரை நடத்த வைத்தார்கள். ஜெகன் 2 வருஷமா எந்த சம்பவத்துக்கும் போகாம ஒழுங்காதான் இருந்தான். ஆனா போலீஸும், இன்னும் சிலரும்தான் அவனை வம்படியா இழுத்துவிட்டு சாவடிக்கிற அளவுக்கு கொண்டாந்து நிறுத்திட்டாங்க அவனை கோயமுத்தூர்ல கைது பண்ணி திருச்சி சனமங்கலம் காட்டுப்பக்கம் கொண்டுவந்து, காலை உடைச்சு, கைகளை கட்டிப்போட்டு சுட்டுக் கொன்றிருக்காங்க, முதுகுலேயும் காயமிருக்குது. இது ஒரு திட்டமிட்ட கொலை” என்று கொதித்தார்கள்.
‘தற்காப்புக்காக என்கவுன்டர்’ எனும் கவர் மாட்டப்பட்ட துப்பாக்கியால் கொம்பன் சுடப்பட்டது அநீதி என்றாலும், அவனால் நட்புக்காகவும், பழக்கத்துக்காகவும் உள்ளிட்ட இன்ன பிற விஷயங்களுக்காக கதறக் கதற சில பல உயிர்கள் குதறப்பட்டது மட்டும் நீதியா என்ன என்பதே காக்கியின் காட்டமான கேள்வி.
(ரத்தம் தெறிக்கும்) – எஸ். ஷக்தி.