India
oi-Halley Karthik
பாட்னா: பீகாரில் மத்திய உணவில் உப்பு குறைவாக இருக்கிறது என்று மாணவர்கள் கேட்டதால்.. சமையலர் சால்ட்டுக்கு பதில் சர்ப் பவுடரை அள்ளி கொட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சர்ப் தூள் கலந்த உணவை சாப்பிட்ட 34 மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேற்று மதியம் மாணவர்களுக்கு மதிய உணவு விநியோக்கிக்கப்பட்டிருக்கிறது. இதை சாப்பிட்ட மாணவர்களில் 34 பேர் மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நாளந்தாவின் பார்சா நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த உணவை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே குழந்தைகளுக்கு தொண்டை மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. சில குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து குழந்தைகள் உடனடியாக பீகார் ஷெரீப் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தற்போது குழந்தைகள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், பெரிய பிரச்சனை ஏதும் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் சமையலறையில் உப்பும், சர்ப் தூளும் பக்கத்து பக்கத்தில் வைக்கப்பட்டிருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. சமையலர் கவனக்குறைவாக உப்புக்கு பதில் சர்ப் தூளை போட்டுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், உணவின் தரம் சரியாக இல்லை.. உப்பு கூட இல்லை என்று கேள்வி கேட்டதால்தான் சமையலர் வேண்டும் என்றே உப்புக்கு பதில் சர்ப் தூளை போட்டு கலக்கிவிட்டார் என்று மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர், உணவில் சர்ப் தூள் கலக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்ட போதிலும் நாளந்தா மாவட்ட கல்வி அதிகாரி ஹேம்சந்திரா.. இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மருத்துவ அறிக்கை வந்த பின்னர்தான் உண்மை தெரிய வரும் என்று கூறியிருக்கிறார்.
நாளந்தா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான சரவண குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளை பார்வையிட்டார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தவும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு மையத்தில் திடீர் சோதனைகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.


