வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், உலக அளவில் மூன்றாவது பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர்.தஞ்சாவூர் சந்தானகிருஷ்ண கனகா 31/03/1932 அன்று எட்டுப் பிள்ளைகள் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் சந்தானகிருஷ்ண நாயுடு மற்றும் பத்மாவதி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகளாக சென்னையில் பிறந்தார். அவரது பெயரில் உள்ள ‘தஞ்சாவூர்’ என்பது அவரது குடும்பத்தின் பூர்வீக ஊரைக் குறிக்கும் குடும்பப் பெயராகும்.

சிறு வயது முதலே படிப்பில் மிகச் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த கனகா, சென்னையில் உள்ள பள்ளிகளில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். இவரது தங்கை ஒருவருக்கு ஏற்பட்ட தீவிர உடல் நலக்குறைபாடும், அதற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சையும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட கனகாவை மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. சென்னை மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பைத் தொடங்கிய கனகா, 1954-ஆம் ஆண்டு தனது இளநிலை மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.
பொது அறுவை சிகிச்சை பிரிவில் மேற்படிப்பு படிக்க விரும்பிய கனகா, தான் ஒரு பெண் என்பதால் பல தடைகளை எதிர் கொண்டார். பலமுறை தேர்வுகளில் திட்டமிட்டு தோல்வியடையச் செய்யப்பட்ட போதிலும், விடாமுயற்சியுடன் போராடி 1963-ஆம் ஆண்டு எம்.எஸ் (ஜெனரல் சர்ஜரி) பட்டத்தைப் பெற்றார். பெண் என்ற காரணத்திற்காகவே ஆண் தேர்வாளர்கள் தொடர்ந்து தோல்வியடையச் செய்த காரணத்தால் கனகா, பொது அறுவை சிகிச்சை இறுதித் தேர்வை ஆறு முறை எழுதினார்.
பெண் என்பதால் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு இவருக்குத் திறமையும் தைரியமும் இருக்காது என்று மூத்த ஆண் மருத்துவர்கள் கருதினர். அறுவை சிகிச்சைக்கு தயாராகும் முன் மூத்த மருத்துவர்கள் கைகளை தேய்த்துச் சுத்தம் செய்யும் பணியில் உதவுவதற்குகூட பயிற்சி காலத்தில் மருத்துவர் கனகா அனுமதிக்கப்படவில்லை. ஆண்கள்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அறுவை சிகிச்சை கத்தியை வழங்கவே பேராசிரியர்கள் தயங்கினர். ஒரு தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக உருவாக அவசர கால பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை கையாளும் பயிற்சி பெறுவது அவசியம். ஆனால் பயிற்சி பெறும் போது அம்மருத்துவமனையின் இயக்குநரும் மூத்த மருத்துவ அதிகாரிகளும் திட்டமிட்டே எவ்வித அவசர பிரிவு நோயாளிகளையும் கையாள கனகாவை அனுமதிக்கவில்லை.

இந்தியாவின் புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் மருத்துவர்.பி.ராமமூர்த்தியின் வழிகாட்டுதலின் கீழ் நரம்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்.கனகா 1968-ஆம் ஆண்டு நரம்பியல் அறுவை சிகிச்சையில் எம்.சிஹெச் (M.Ch-Master of Chirurgical) பட்டம் பெற்றார். இதன் மூலம் ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிய பிறகும் தனது ஆராய்ச்சியை தொடர்ந்த கனகா, ‘மூளை முடக்குவாதம்’ (செரிப்ரல் பால்சி) தொடர்பான தனது ஆராய்ச்சிக்காக 1972-ஆம் ஆண்டு முனைவர் (Phd) பட்டமும் பெற்றார். பெண்கள் மருத்துவத் துறைக்கு வருவதே அரிதான அக்காலத்தில் கடினமான நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் முழு கவனம் செலுத்தவும், ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வழங்கவும் திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதையும் மருத்துவத்திற்காகவே அர்ப்பணித்தார். சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி 1990- ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கனகா, 1962–1963 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய-சீனப் போரின் போது இந்திய இராணுவத்தில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.

தனது வழிகாட்டியான பேராசிரியர் பி. ராமமூர்த்தி, பேராசிரியர்கள் எஸ். கல்யாணராமன் மற்றும் வி. பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் இணைந்து 1975-ஆம் ஆண்டில் மருத்துவர். கனகா, இந்தியாவின் முதல் நீடித்து உழைக்கும் மின்முனை உள்வைப்பு (Chronic electrode implant) சாதனம் பொருத்தும் ஆழ்ந்த மூளை தூண்டல் (DBS-Deep Brain Stimulation) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.
தற்போது போல, அதிநவீன முப்பரிமாணக் கணினி, உடலூடச்சு ஊடுகதிர் வரைவி (CT Scan), காந்த அதிர்வு அலை வரைவி (MRI) இல்லாத காலத்தில் அப்போதிருந்த சாதாரண ஊடுகதிர் (X-Ray) படங்களை மட்டுமே கொண்டு, மூளையின் அகலம், நீளம், ஆழம் ஆகிய முப்பரிமாணக் புள்ளிகளைத் தனது கணிதத் திறமையால் துல்லியமாகக் கணக்கிட்டு டாக்டர் கனகா முப்பரிமாண இடவமைப்பு அறுவை சிகிச்சைகளைச் செய்தார். ஒரு மில்லிமீட்டர் தவறினாலும் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில், அவரது கைத்திறன் மற்றும் கணக்கீடு மிகத் துல்லியமாக இருந்தது.

அக்காலத்தில்ஜப்பான்உட்படமூன்றுநாடுகளில்மட்டுமேசெய்யப்பட்டுவந்த இத்தகையஅதிநவீனமுப்பரிமாண இடவமைப்பு மற்றும்நரம்புதூண்டல்சிகிச்சைகளைகொழும்புபிளான்ஃபெலோஷிப்மூலம்டோக்கியோவிற்குச்சென்றுஇந்தத்நுட்பத்தைக்கற்றுவந்து இந்தியாவில்செயல்படுத்தினார். மூளைமுடக்குவாதம் (Cerebral Palsy), வலிப்புநோய் (Epilepsy), தசைஇறுக்கம்மற்றும்நடுக்கம் (Spasticity & Tremors), மனநலக்கோளாறுகள் (Psychiatric Disorders) போன்ற பாதிப்புகளுக்கு இந்தச்சிகிச்சைமூலம்மறுவாழ்வு தந்தார். மேற்கத்தியநாடுகள்இந்தத்தொழில்நுட்பத்தைபயன்படுத்த ஆரம்பித்த 10 ஆண்டுகளுக்கு முன்பே,சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய போது, தனது குழுவினருடன் இணைந்து சுமார் 1,700-க்கும் மேற்பட்ட முப்பரிமாண இடவமைப்பு அறுவை சிகிச்சைகளை அவர் வெற்றிகரமாகச் செய்துள்ளார்
சென்னை குரோம்பேட்டையில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்க தனது ஓய்வூதியப் பணம் மற்றும் சேமிப்பு கொண்டு ‘ஸ்ரீ சந்தானகிருஷ்ண பத்மாவதி ஹெல்த்கேர் அண்ட் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ என்ற மையத்தைத் தொடங்கினார். தனது 80 வயதிலும், சென்னை குரோம்பேட்டையில் உள்ள இந்த மருத்துவ மையத்தில் ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
தனது வாழ்நாளில் 139 முறை இரத்த தானம் செய்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். பெண் அறுவை சிகிச்சை நிபுணர்களை ஊக்குவிப்பதற்காக, 1996-ஆம் ஆண்டில் ‘ஆசியப் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தை’ தொடங்கினார்.

நம் நாட்டு ஏழை நோயாளிகளும் இந்த முப்பரிமாண சிகிச்சையைப் பெற வேண்டும் என்பதற்காக மருத்துவர்.கனகா இந்தியப் பொறியாளர்களுடன் இணைந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உயர்தர மலிவு விலையிலான உள்நாட்டு முப்பரிமாணச் சட்டகங்கள், மின்முனைகளை வடிவமைத்துப் பயன்படுத்தினார்.
நவீன மருத்துவத்தில் இன்று பயன்படுத்தப்படும் ‘இயந்திரமனித மூளை அறுவை சிகிச்சைகளுக்கும்’ (Robotic Brain Surgery) கத்தி இல்லாத லேசர் சிகிச்சைகளுக்கும் மருத்துவர்.கனகா அமைத்துக் கொடுத்த இந்த முப்பரிமாண இடவமைப்பு சிகிச்சை முறை யே அடித்தளம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.