முன்னணி நடிகராக இருந்து தற்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் “ஜனநாயகன்’. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்றே வெளியாக வேண்டிய நிலையில், தணிக்கைக் குழுவில் (CBFC) சந்தித்த எதிர்பாராத சிக்கல்களால் வெளியாவதில் தாமதத்தை எதிர்கொண்டது. 2025 டிசம்பரில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளித்தது. அவர்கள் பரிந்துரைத்த சில திருத்தங்களையும் படக்குழு உடனடியாகச் செய்து கொடுத்தது.

சான்றிதழ் கைகளில் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், படத்திற்கு எதிராக ஒரு புகார் வந்துள்ளதால், சான்றிதழை நிறுத்தி வைத்து படத்தை ‘மறுஆய்வுக் குழுவுக்கு’ (Revising Committee) மாற்றுவதாக தணிக்கை வாரியம் மின்னஞ்சல் அனுப்பியது.
“படம் இன்னும் வெளியாகவே இல்லை, அதற்குள் எப்படி அதன் மீது புகார் வர முடியும்?” எனக் கேள்வி எழுப்பிய படக்குழு, சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியது.