சினிமா ரசிகர்களுக்கு முதல்வர் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்.. தமிழ்நாட்டில் இனி 6 AM SPECIAL SHOW! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 திரையிட மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ். திரையரங்குகளுக்கு வழங்கப்படும் படிவ உரிம நிபந்தனை 14-A-இன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4-காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள். வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொதுவிடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

முதலமைச்சர் விஜய்யிடம் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

கடந்த 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, அஜித் குமாரின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் வெளியானபோது, ​​திரையரங்குகளுக்கு வெளியே நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது இளைஞர் ஒருவர் நகரும் வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிகாலைக் காட்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு, நடைமுறையில் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டு தவெக அரசு அமைந்த நிலையில், மீண்டும் 6 மணி காட்சிகளுக்கு அனுமதியளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பினால் தமிழ் சினிமாவில் முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது. குறிப்பாக காலை 6 மணி முதல் காட்சிகள் திரையிடப்படுவது திரையரங்க உரிமையாளர்களுக்கு கூடுதல் வருமானம் ஏற்படும். மேலும், முதல் வாரத்தில் 6 காட்சிகள் திரையிடப்படுவதால் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்கள் கூடுதல் வசூல் பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *