தேவர்கள் மகிழ்ந்து, ‘`பெருமானே… தாங்கள் கள்ள விநாயகர் என்ற திருநாமத்துடன் இவ்விடத்திலேயே எழுந்தருளி, அன்பர்கள் வேண்டியதைத் தந்தருள வேண்டும். தாங்கள் அருளிய அமுதத்தை தங்கள் திருமுன் வைத்து அருந்த விரும்புகிறோம்’’ என்று வேண்டினர்.
பிள்ளையாரும் “அப்படியே ஆகட்டும்’’ என்று அருள் புரிந்தார். பிறகு, ஞானவாவியின் மேல்புறம் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து துதித்துப் போற்றினர். கணபதியின் திருவருளால் அமுதத்தை உண்டு மகிழ்ந்தனர்.
இன்றைக்கும் இந்தத் தலத்துக்குத் தன்னைத் தேடிவந்து வணங்கும் பக்தர்களின் உள்ளங்களைக் கவரும் கள்வனாக, அவர்கள் வேண்டும் வரங்களை அருளும் வள்ளலாக அருள்பாலிக்கிறார், இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்.

மார்க்கண்டேயனின் சிவபக்திக்காக எமனைக் கடிந்த தலமான திருக்கடவூரில் காலசம்ஹார மூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷம். ஈசன், மார்க்கண்டேயருக்காக காலனை தண்டித்த தலம் இது. ஆக, இறைவன் இங்கே கால சம்ஹாரராக தனிச்சந்நிதியில் அருள்கிறார்.
‘மிருத்யு’ எனும் மரணத்தை வெல்பவர் அவர். எனவே, அவரை ‘மிருத்யுஞ்ஜயர்’ என்றும் போற்றுவர். உயிர்களை அழிக்கும் யமனுக்கும் காலனாகத் திகழ்பவர் சிவபெருமான். அதனால் அவரை காலாந்தகர், காலாரி, கால காலர், காலசம்ஹாரர், கால கண்டன் என்ற பல பெயர்களால் அழைப்பர்.
அம்மை அபிராமியும் நம் வினைகளைக் களைந்து மரணத்துக்கு ஒப்பான கண்டங்களையும் அகற்றி சந்தோஷ வாழ்வு தரும் தாயாகத் திகழ்கிறாள். அபிராமியம்மையின் சந்நிதி தனிக் கோயிலாகக் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
அமிர்தகடேசர் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் வெளி மண்டபத்தில், இடதுபுறம் கிழக்கு நோக்கிகள்ள வாரணப் பிள்ளையார் காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்துக்கு வந்து இந்த கள்ளவாரணப் பிள்ளையாருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து வழிபட, ஆனந்த வாழ்வு கிட்டும். வாழ்க்கை நலமாகும். வளமாகும்.!