இந்த விவகாரத்தில் ஜெம் வீரமணிக்குத் தொடர்புடைய அத்தனை பேரையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வீரமணியிம் கார் ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சிறுமிகளின் உடல் எதாவது புதைக்கப்பட்டிருக்கிறதா என்கிற கோணத்தில் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இதற்காக இன்று மதியம் 1 மணி வாக்கில் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள வீரமணியின் வீட்டுக்கு காவல்துறையினர், வருவாய்த்துறையினர், மருத்துவக்குழுவினர், தடயவியல் துறையினர் என 30 க்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்தனர்.
புல்டோசரின் உதவியுடன் வீரமணியின் வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் முதலில் குழி தோண்டியிருக்கின்றனர். 10 அடிக்கும் மேல் தோண்டப்பட்ட இந்தக் குழியில் எந்த உடலும் கைப்பற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து அருகிலேயே இன்னொரு இடத்தில் இப்போது குழி தோண்டி கொண்டிருக்கின்றனர்.
வீரமணியின் வீட்டைச் சுற்றி எதாவது உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்கிற நோக்கில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் தங்களை அனுமதிக்கவில்லையென்றும் ஜெம் வீரமணியின் மனைவி தாக்கப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.