International
oi-Hema Vandhana
நியூயார்க்: அமெரிக்காவில் 45 நாட்களாக ஊர் முழுவதும் சுற்றித் திரிந்த ஒரு செம்மறி ஆட்டை யாராலும் பிடிக்க முடியவில்லை. பலரும் முயற்சி செய்தும் சிக்காத அந்த ஆட்டை, கடைசியில் 13 வயது சிறுமி தனது குதிரையில் சென்று கயிறு வீசிப் பிடித்துள்ளார். பல மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தில் சிறுமிக்கு உதவியது அவரது குதிரைதான். எப்படி தெரியுமா?
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வாட்ஸ்வொர்த் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 45 நாட்களுக்கு முன்பு அங்கு ஒரு செம்மறி ஆடு சுற்றித் திரிவதை மக்கள் பார்த்துள்ளனர். அதன்பிறகு அந்த ஆடு ஊரின் பல இடங்களில் சுற்றி வந்துள்ளது. சில நேரங்களில் வீடுகளின் அருகே வரும். யாராவது பிடிக்க முயன்றால் உடனே அந்த செம்மறி ஆடு ஓடிவிடும்.

சுற்றி வந்த செம்மறி ஆடு
அந்த பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டு தோட்டத்துக்கு அடிக்கடி வந்ததால், அவர் அந்த ஆட்டுக்கு தீனி கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதை யாராலும் பிடிக்க முடியவில்லை. வேறொரு செம்மறி ஆடு, வெள்ளாடு போன்றவற்றை காட்டி அதை பிடிக்க முயன்றனர். அப்போதும் முடியவில்லை.. ஆடு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ட்ரோன் கேமராவையும் பயன்படுத்தினர். ஆனாலும் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இதற்கிடையே அந்த ஆடு பலமுறை சாலையை கடந்து சென்றுள்ளது. ஒவ்வொரு முறையும் சாலைக்கு செல்லும்போதெல்லாம் வாகனத்தில் அடிபட்டு அதற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் கவலைப்பட்டனர்.
13 வயது சிறுமி
அதனால் அனைவரும் ஒன்றுசேர்ந்து, கயிறு வீசிப் பிடிக்க தெரிந்த ஒருவரின் உதவியை நாடினர். அப்போது இதுபற்றிய தகவல் ஃபேஸ்புக்கில் வெளியானது. இதைப் பார்த்த 13 வயது சிறுமி ரீகன் க்ரம்ப்ளரின் தாய் ஷானன், தனது மகளால் அந்த ஆட்டைப் பிடிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
ரீகனுக்கு குதிரை சவாரி செய்வது மிகவும் பிடிக்குமாம்.. வாரத்தில் நான்கைந்து நாட்கள் இதற்காகவே நேரம் ஒதுக்கி, கயிறு வீசிப் பிடிக்கும் பயிற்சிக்கும் சென்று வருகிறாராம்.. செம்மறியாட்டை பிடிக்க வேண்டும் என்று சொன்னதுமே, நவம்பர் 11-ம் தேதி தனது குதிரையான கேடலினாவுடன் ஆட்டைப் பிடிக்கக் கிளம்பினாள் சிறுமி,.
அமெரிக்காவில் வயல்வெளி
ஒருவழியாக அமெரிக்க நெடுஞ்சாலை 224 அருகே உள்ள வயல்வெளியில் அந்த ஆடு ஓடிக்கொண்டிருந்ததை கவனித்து விட்டாள்.. உடனே குதிரையில் சென்ற ரீகன் அதைத் துரத்தினாள். ஆனால் ஒவ்வொரு முறை நெருங்கும்போதும் ஆடு திரும்பி ஓடியது. இதனால் கயிறு வீசி பிடிக்க முடியவில்லை. பல மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது.. அதாவது அன்றைய தினம் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மட்டும் சுமார் 4 மைல் தூரம் நடந்தும் தேடியும் அலைந்தாள் 13 வயது சிறுமி.
ஒரு கட்டத்தில் ரீகனுக்கே நம்பிக்கை குறைய தொடங்கியது. அப்போது தனது குதிரையிடம், “வா கேட்.. நம்மால் முடியும். தொடர்ந்து முயற்சி செய்யலாம்” என்று குதிரைக்கு நம்பிக்கை தந்தாள்..இதைக் கேட்டதும் குதிரை இன்னும் வேகமாக ஓடியதாம்.. ஆட்டுக்கு முன்னால் சென்று அதை நெருங்கியதும், ரீகன் கயிறு வீசிப் பிடித்துவிட்டாள்.
இந்த காட்சியை பார்த்ததுமே, அக்கம்பக்கத்தினர் வீடுகளை விட்டு வெளியே வந்து சத்தமிட்டும், வீடியோ எடுத்தும் துள்ளி குதித்துள்ளனர். கடைசியில் ஆடு பிடிபட்டதும் அங்கிருந்தவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்..
ஆனந்த கண்ணீர் – மீட்பு பணி
இந்த மீட்புப் பணியில் விஸ்பரிங் ஏக்கர்ஸ் விலங்குகள் பாதுகாப்பு பண்ணையின் நிறுவனர் ஜானின் ஸ்மாலி, தன்னார்வலர் ரெபேக்கா ராக்ஸ்பெர்ரி ஆகியோர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
“அந்த ஆடு காயமடைவதை நான் விரும்பவில்லை. எனக்கு எல்லா விலங்குகளுமே பிடிக்கும்.. அதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்… ஆடு பாதுகாப்பாகக் கிடைத்த பிறகுதான் எங்கள் எல்லாருக்குமே நிம்மதி ஏற்பட்டது” ” என்று ரெபேக்கா தெரிவித்துள்ளார்.
ஜெர்ரி ரீகன் ஹேப்பி
மீட்கப்பட்ட ஆட்டுக்கு ரீகனின் பெயரையும் சேர்த்து “ஜெர்ரி ரீகன்” என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.. இப்போது அந்த ஆடு விஸ்பரிங் ஏக்கர்ஸ் பண்ணையில் ஹாயாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது..
அந்த ஆடு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதற்கு விரைவில் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்யப்படும் என்றும் பண்ணை நிறுவனர் தெரிவித்துள்ளார். அந்த ஆட்டின் நிலை குறித்து தகவல்களைப் பகிர தனியாக ஃபேஸ்புக் பக்கமும் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த மீட்புப் பணிக்குப் பிறகு பண்ணைக்கு புதிதாக 6 தன்னார்வலர்களும் கிடைத்துள்ளனர்.
அடுத்த 72 மணி நேரத்துக்குள் உரிய ஆவணங்களுடன் அதன் ஓனர் யாராவது வந்தால் ஆடு அவர்களிடம் ஒப்படைக்கப்படும். யாரும் வராவிட்டால் அந்தப் பண்ணையிலேயே ஆடு ஜாலியாக இருக்கும்போல..!!