சென்னை காசிமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற பாம்பு தினேஷ் என்பவர் சிறுமியுடன் அன்பாக பேசி பழகி வந்திருக்கிறார். சம்பவத்தன்று சிறுமி, தினேஷ் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகத் தெரிகிறது. அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு தனக்கு நடந்த கொடுமையை உறவினரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் இந்தத் தகவல் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது.
அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் தினேஷைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தினேஷ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தினேஷ், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக விசில் சின்னத்துக்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்தவர். மேலும் அவர் தவெகவின் தீவிர ஆதரவாளர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.