சிவகங்கை சோகம்: இறந்த தந்தையின் உடலுடன் 3 நாள்கள் வசித்த மனநலம் குன்றிய மகன்!| Sivaganga Tragedy: Mentally Ill Son Lives with Father’s Body for 3 Days

Spread the love

சிவகங்கையில் தந்தை உயிரிழந்தது கூடத் தெரியாமல், அவரது உடலுடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மூன்று நாள்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை கமலா நேரு தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் பிரபு (வயது 72). இவரது மனைவி சாந்தா மேரி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

இந்த தம்பதிக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் ஒரு மகன் கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில், மற்றொரு மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். எஞ்சிய இரு மகன்களான ஆரோக்கிய செல்வராஜ் மற்றும் டேவிட் ஆகிய இருவரும் மனநல பாதிப்புடன் தந்தையுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஆரோக்கிய செல்வராஜ் பெரும்பாலும் தெருவில் சுற்றித்திரிந்து வந்த நிலையில், டேவிட் என்பவர் தந்தையுடன் வீட்டிலிருந்து வந்துள்ளார்.

சிவகங்கை சோகம்

சிவகங்கை சோகம்

ஏற்கெனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் பிரபு, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வீட்டிற்குள்ளேயே தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தந்தை உயிரிழந்ததை உணர முடியாத நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் டேவிட், அவரது உடலுடனேயே அந்த வீட்டிற்குள் தொடர்ந்து இருந்துள்ளார்.

நாள்கள் கடந்த நிலையில் உடல் அழுகத் தொடங்கி, வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவலின் பேரில் விரைந்து வந்த சிவகங்கை காவல்துறையினர், வீட்டிற்குள் உயிரிழந்து கிடந்த வின்சென்ட் பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவுகள் பல இருந்தும் ஆதரவற்ற நிலையில் முதியவர் உயிரிழந்ததும், தந்தை இறந்த விவரம் தெரியாமல் மனநல பாதிப்புடன் மகன் மூன்று நாள்களாகச் சடலத்துடனேயே வசித்து வந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *