விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தெரிந்த சுரேஷ், பிரபாகரனைக் கண்டித்தாராம். ஆனால், பிரபாகரன் தொடர்ந்து அச்சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு மதியம் வீட்டை விட்டு வெளியே வந்த பிரபாகரன் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், பிரபாகரனின் பெற்றோர் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீஸாரின் விசாரணையில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பிரபாகரனுக்கும், சுரேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் சந்தேகத்தின் அடிப்படையில் சுரேஷைத் தேடினர். கொத்தனேரி பகுதியில் படுத்துக்கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்றனர்.
மதுபோதையில் படுத்துக்கிடந்த சுரேஷிடம் விசாரணை நடத்தியதில், தனது நண்பர் விக்னேஷ்வரன் மூலம் மது அருந்த அழைத்து பிரபாகரனை கழுத்தை அறுத்து கொலை செய்து அங்குள்ள கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீஸார் சுரேஷைக் கைது செய்தனர்.