அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் ‘பவர்’ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் மட்டுமின்றி, தமிழக அளவிலும் தனக்கெனத் தனிச் செல்வாக்கை வைத்திருந்தவர்.
சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து விலகி, விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சியில் இணைவதற்கு முன்பாகவே தொகுதி முழுவதும் சென்று மக்களிடம் கருத்துக் கேட்பது, மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பது, ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை அழைத்து பிரமாண்டமாக பிரியாணி விருந்தளிப்பது என புதுக்கோட்டையை அதிரவைத்தார் சி.விஜயபாஸ்கர்.
“பனையூரிலிருந்து அண்ணனுக்கு மண்டலப் பொறுப்பு அல்லது மாநில அளவில் “துணைப் பொதுச் செயலாளர்’ பதவி நிச்சயம் வரும்” என்று அவரது ஆதரவாளர்கள் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.
ஆனால், தவெக தலைமை வெளியிட்ட புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு, விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்,
“சி.விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ‘அமைப்புச் செயலாளர்’ பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த மற்ற தலைவர்களான கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மதுராந்தகம் மரகதம் குமரவேல், நாங்குநேரி ராஜகோபால் உள்ளிட்டோருக்கு மாவட்டப் பொறுப்போடு சேர்த்து, மாநில அளவிலான ‘துணைப் பொதுச் செயலாளர்’ பதவியும் வழங்கப்பட்டுள்ளது.