சீமான் சட்டமன்றத்திற்குள் வர வேண்டும்’ என்று புது குண்டை வீசி இருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அவர் உருவாக்கிவரும் புதிய கூட்டணி வெற்றிபெற்றால், சுழற்சி முறையில் சீமான் மற்றும் அன்புமணி முதல்வராக இடம்பெறுவார்கள் என அரசியல் நெருப்பையும் பற்ற வைத்திருக்கிறார். அவரை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்…
நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிற த.வெ..க கூட்டணி ஆட்சி எப்படி?
“காங்கிரஸ், வி.சி.கவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. இது பாராட்டுதலுக்குரியது. அரசு நிர்வாகத்தை சீர்படுத்த த.வெ.க. அரசு இன்னும்கூட அவகாசத்தை எடுத்துக்கொள்ளலாம். அது தவறில்லை. ஆனால், இந்த மூன்று மாதங்களில், வாக்களித்த மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. தினமும் படுமோசமான சம்பவங்கள் நடக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இந்த நாட்டை ஆள வேண்டும். அதற்கு பதிலாக யாரோ எங்கிருந்தோ இந்த ஆட்சியை இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.”
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவது அவசியமா?
எத்தனையோ சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களிடம் கார் இல்லை என்பதை தெரிவித்திருக்கிறார்கள். அப்படி தெரிவித்தவர்கள் யார், அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது கார் வசதி இல்லாமல் இருந்தார்களா என்பதை ஆய்வு செய்து, அவர்களுக்கு வட்டியில்லாக் கடன் மூலம் கார் வாங்க ஏற்பாடு செய்து தந்திருக்கலாம். அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு ஒரு வாகனம் வழங்கலாம். ஐந்து வருடம் அவர்கள் பணி முடிந்தவுடன் அந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இப்படி செய்திருந்தால் இது விவாதப்பொருளாக மாறியிருக்காது.”
சட்டப்பேரவையில் ‘லைவ்’ அவசியமா?
நேரடி ஒளிபரப்பு என்பது வரவேற்கக்கூடியதுதான். ஆனால், எந்த நோக்கத்திற்காக நேரடி ஒளிபரப்பு கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் வேறு மாதிரி ஆகிவிட்டது. அதாவது சட்டமன்றம், அமைச்சர்கள் என்றாலே அவர்கள் மீது வெறுப்பும், கோபமும் திரும்பும் வகையில் தற்போதைய சட்டமன்றம் நடந்துகொண்டிருப்பதாக நான் பார்க்கிறேன். ஆரோக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக பாடல்கள் பாடுவதும், சிறுகதைகள் கூறுவதும், நையாண்டி நக்கல் செய்வதும், செய்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளை கேலி செய்வதும்தான் சட்டமன்றத்தில் நடக்கின்றன. இது வேதனை”
சட்டசபை ‘லைவ்வை நிறுத்த சொல்கிறதே தி.மு.க?
“என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விவாதங்கள் தமிழக மக்களுக்கு நேரடியா தெரியவேண்டும். சட்டமன்ற உறுப்பினரை வாக்களித்து தேர்வு செய்த வாக்காளர்களுக்கு அவரது தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்கிறார், தன் தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கைகளை எப்படி முன்வைக்கிறார், பொதுவான பிரச்னைகளுக்கு முதல்வரிடத்தில் இருந்து என்ன பதில் வருகிறது என்பதையெல்லாம் பார்த்து தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புதான் நேரடி ஒளிபரப்பு. எனவே தி.மு.க. சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.”
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?
“அவர் இன்னும் கொஞ்சம் தயாரிப்புகளுடன் சட்டசபைக்கு வரவேண்டும். வார்த்தைகளை பேசுகிறபோது கண்ணியமாக இருக்க வேண்டும். எதிரிகள்கூட சிந்திக்கக்கூடிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமையவேண்டும். இதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த நாவலர், அன்பழகன், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் சட்டமன்றக் குறிப்புகளை தேடிப்பிடித்து அதை படித்த பிறகு உதயநிதி உரையாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளைவிட தற்போது உதயநிதியின் பேச்சு பக்குவம் பெற்றதாக இருக்கிறது. ஆனால், அது போதாது. அவர் இன்னும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
விஜய்யைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக சொல்கிறார்களே?
“இதற்கு பதில் சொல்லக்கூடிய அளவுக்கு தமிழ்ச் சமூகம் இருக்கிறதே என நினைத்தால் வேதனையாக இருக்கிறது. மக்களுக்காக 40 ஆண்டுகாலம் போராட்டக் களத்தில் வாழ்கின்ற என்னைப் போன்றவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்களே என்பதை வேதனையுடன் பார்க்கிறேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானதல்ல.”
தன்னிடம் மூன்று முக்கிய ஃபைல்கள் இருப்பதாக சொல்லி மிரட்டுகிறாரே முதல்வர் விஜய்?
“இப்படி மிரட்டுகின்ற அரசியலில் இருந்து முதல்வர் விஜய் முதலில் வெளியே வரவேண்டும். ‘அந்த மூன்று ஃபைல்களை ஓபன் செய்யுங்கள். அதில் நாங்கள் என்ன குற்றம் செய்திருக்கிறோம் என்பதை சொல்லுங்கள். வழக்கை தொடருங்கள்’ என எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிவிட்டார். எனவே, முதல்வர் விஜய்தான் திருவாய் மலர்ந்து அந்த என்பதை சொல்ல வேண்டும்.”
முருகன் ஃபைல்களில் என்ன இருக்கிறது
அண்ணாமலையின் புதிய இயக்கம் மக்களிடம் ‘ரீச்’ ஆகுமா?
அவருக்கென்று சின்னதாக ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. அவர்களை நம்பி அண்ணாமலை புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறார். தமிழக அரசியலை நோக்கி புதுப்புது நடிகர்கள் எல்லாம் வரும்போது, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர், ஐ.பி.எஸ். படித்தவர், பச்சைத் தமிழர் அரசியலுக்கு வரக்கூடாதா? அவரது அரசியலுக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள்தான் உணர்த்தும்.”
ஊழலற்ற ஆட்சி செய்வதாக சொல்கிறதே த.வெ.க?
“த.வெ.க. ஆட்சியில் ஊழல் கட்டுப்படுத்தப் படவும் இல்லை. முற்றிலுமாக ஒழிக்கப்படவும் இல்லை. ‘ஊழல் ஒழிக்கப்படும்’ என்று விஜய் அறிவித்திருக்கிறார். அவ்வளவுதான். ஆனால் பல்வேறு துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அமைச்சர்களுக்கு பதிலாக அதிகாரிகள் நேரடியாக அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆளுங்கட்சியை சேர்ந்த பல பிரமுகர்கள் லஞ்சம் வாங்குவது குறித்து ஒலிநாடாக்கள் வெளிவருகின்றன. எனக்கு இதுவரை கிடைத்த தகவல்கள், தரவுகள் அடிப்படையில் ஊழல், லஞ்சம் கட்டுப்படுத்தப்படவில்லை. த.வெ.க ஆட்சியிலும் லஞ்சம், ஊழல் தொடர்கிறது.”

