சுண்ணாம்பு Vs சிமெண்ட்… கான்கிரீட் இயந்திரங்கள் `டெண்டர்’ – காரசார விவாதம்! | அணை ஓசை 25

Spread the love

மேட்டூர் அணையைக் கட்ட சுண்ணாம்பு கலவையை பயன்படுத்துவதா அல்லது சிமெண்ட் பயன்படுத்துவதா? என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது!

இதுகுறித்து பலத்த விவாதம் அவையில் நடைபெற்றது. காலத்துக்கேற்ப மாற்றம் தேவை என்று பொறியாளர்கள் முன்மொழிந்தனர். அரசாங்கம் அவர்களின் பார்வைக்கு இசைந்தது. ஆனால், மரபுக்கு மாறாக இது புதுமையாக உள்ளது என உறுப்பினர்களிடையே பலத்த சந்தேகம் எழுப்ப காரணமாக அமைந்தது. எனவே, இது குறித்த விவாதம் சட்ட சபையில் அனல் தெறித்தது எனலாம்.

விவாதத்தின் சாரம்

ஆரம்ப திட்ட மதிப்பீடு சுண்ணாம்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உலகின் பெரிய அணைகளில் (1916-க்குப் பிறகு) சுண்ணாம்புக்கு பதிலாக சிமெண்ட் பயன்படுத்தப்பட்டதால், தலைமைப் பொறியாளர் (திரு. முல்லிங்ஸ்) சிமெண்ட்டுக்கு ஆதரவாக பரிந்துரை செய்தார். சிமெண்ட் விலை அதிகமாக இருந்தாலும், அது நீடித்தும், வலிமையுமாக இருக்கும் என்பதால் கூடுதல் செலவு நியாயமாகும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் சிமெண்ட் தரத்தில் குறைவில்லை, வெளிநாட்டு இறக்குமதியுடன் ஒப்பிடும்படியே உள்ளது என்ற கருத்து நிலவியது.

சட்டமன்றத்தில் எழுந்த சந்தேகங்கள்:

“ஏன் மரபான சுண்ணாம்பு முறையை விட்டு விலக வேண்டும்?”

“வடஇந்தியாவிலும், இந்தியாவின் பழைய அணைகளிலும் எல்லாம் சுண்ணாம்பே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஏன் மாற வேண்டும்?”

“சிமெண்ட் பயன்படுத்தினால் செலவு எவ்வளவு அதிகரிக்கும்?”

“மணல், சுண்ணாம்பு, சிமெண்ட் ஆகிய பொருட்கள் அருகிலேயே கிடைப்பதால் செலவு குறையுமா?”

“இந்திய பொறியாளர்களிடம் (உதாரணம்: சர் விஸ்வேஸ்வரய்யா) ஆலோசனை பெற்றீர்களா?”

“தலைமைப் பொறியாளருக்கு பெரிய அணைகள் கட்டிய அனுபவம் எவ்வளவு?” இவ்வாறான கேள்விகள் பல உறுப்பினர்களிடமிருந்து கேட்கப்பட்டது.

இது குறித்து அரசின் சார்பாக சர்.சி.பி.ராமசாமி அய்யர் பதிலளித்தார்:

“அரசு இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை, ஆனால் பொறியாளர்களின் ஆலோசனையை கவனத்தில் எடுக்கிறது. உலகின் புதிய அணைகள் பெரும்பாலும் சிமெண்டால் கட்டப்பட்டுள்ளன மற்றும் கட்டப்பட்டு வருகின்றன.

சுண்ணாம்பு முறையால் தேவையான வலிமை கிடைக்காது, அதனால் சிமெண்ட் அதிகம் பொருத்தமாக இருக்கும். இந்திய சிமெண்ட் உற்பத்தி போதுமானதாகவே உள்ளது, அதைத் தான் பயன்படுத்துவோம்” என்றும் உறுதிபட கூறினார்.

1916-ம் ஆண்டுக்குப் பிறகு உலகில் கட்டப்பட்ட அனைத்து அணைகளும் குறிப்பாக தென் அமெரிக்கா, எகிப்து, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிமெண்ட்தான் சிறந்தது என்று அதை பயன்படுத்துகிறார்கள்.

சிமெண்ட் வைத்து அணை கட்டுவதே இப்போது நடைமுறையாக உள்ளது. மேட்டூருக்கு அருகில் மணல், சுண்ணாம்பு போன்ற கட்டுமான பொருட்கள் கிடைத்தாலும், விலை சற்று கூடுதலாக ஆனாலும், சிமெண்ட் பயன்படுத்துவது சாலச்சிறந்தது என்ற முடிவுக்குச் செல்வதாகவே அரசின் பதில் இருந்தது.

சுண்ணாம்பு கலவைக்கு பதிலாக சிமெண்ட் பயன்படுத்துவது என்ற கொள்கை முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற காரசாரமான விவாதத்தை எதிர்கொண்டது மெட்ராஸ் மாகாண சட்டக் கவுன்சில்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *