
ஜெயாப்ரியன்
காபெரியவா ஸ்ரீமடத்துல தரிசனம் குடுத்துண்டு இருந்த சமயத்துல, அவரை தரிசிக்க வந்தவாள்ல, நடுத்தர வயசுக்காரர் ஒருத்தரும் இருந்தார். வரிசைல அவர் நிற்கறச்சேயே பலரும் அவரை சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிண்டு இருந்தா. அவர் முறை வந்ததும், மகானை சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சுட்டு எழுந்தார்.
அவரை ஏற இறங்கப் பார்த்த மகான், “நீ தெனமும் நூறு பேருக்கு அன்ன தானம் செய்யறே போல இருக்கே?”ன்னு கேட்டார். அதுக்காகவே காத்துண்டு இருந்தவர் மாதிரி, “ஆமாம் சுவாமி. எல்லாருமே பாராட்டறா.. பேப்பர்ல எல்லாம் கூட எழுதியிருக்கா!” கொஞ்சம் கர்வமாவே சொன்னார் வந்தவர்.
கொஞ்ச நேரம் அமைதியா இருந்த மகான், “பேப்பர்ல எழுதறாளா? விளம்பரமா போடச் சொல்றியா?” கேட்க, கொஞ்சம் தர்மசங்கடத்தோட நெளிஞ்சார் வந்தவர்.
“ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ. இப்படி சுய விளம்பரத்துக்காக செய்யறதுக்குப் பேர் தானம் இல்லை. அதுனால புண்ணியமும் இல்லை. நீயா விளம்பரம் தேடிக்கறதை நிறுத்திட்டு, அதுக்கு செலவு பண்ணற காசையும் செலவழிச்சு அன்னதானம் பண்ணு. புண்ணியம் சேரும். சாப்பிடறவாளும் மனசார புகழ்வா!
தானமோ தர்மமோ எதைச் செஞ்சாலும் அதுல
சுயநலம்கற நோக்கம் இல்லைன்னாதான், அது புண்ணியம். நோக்கம் இருந்தா, அது எந்தப் பிரயோஜனமும் இல்லாம, கடலுல பெய்ஞ்ச மழை மாதிரிதான் ஆகும். புரிஞ்சுதா!” சொன்ன மகான், கொஞ்சம் கல்கண்டும் குங்குமமும் தந்து ஆசிர்வதிச்சார். புரிஞ்சுண்டதுக்கு அடையாளமா, அவர் சொன்ன ஜயஜய சங்கர ஹரஹர சங்கர கோஷம், ஸ்ரீமடத்துல நிறைஞ்சு எதிரொலிச்சுது.