இவ்வுலகில் வாழும் அத்தனை உயிர்களும் சூழலியலோடு ஒன்றி இயங்குவதோடு மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் நிலையையும் உயிர் காட்டியாக (Bio indicators) இருந்து சுட்டுகின்றன.
மழை வருவதை முன்கூட்டியே உணர்த்தும் தும்பிகள்! சீரான மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள்! நீரின் மாசற்ற தன்மையை உணர்த்தும் பூஞ்சைகளை போல “புலி வண்டு” இனமும் ஓர் உயிர்காட்டி தான்.
புலி வண்டுகள் சேலம் காவிரி ஆறு மற்றும் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப்பகுதிகளிலும் உள்ளன என்பதை, ஆய்வின் மூலம் பதிவுசெய்துள்ள பல்லுயிர் ஆராய்ச்சியாளரான ஏஞ்சலின் மனோவிடம் பேசினோம்.
“கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து, சேலத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலையான ஏற்காடு மற்றும் காவிரி ஆறு, நீர்த்தேக்கப் பகுதியான மேட்டூரிலும் பறவை மற்றும் பல்லுயிர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த ஆய்வில் தான், அங்குள்ள புலி வண்டு வகையையும் கண்டுபிடிக்க முடிந்தது.
ஏற்கெனவே, ஏற்காடு பகுதியில் சில புலி வண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. நானும் கடந்த மாதத்திலிருந்து “புலி வண்டு” தேடும் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது காவிரி ஆறு மற்றும் ஸ்டான்லி நீர்த்தேக்கப்பகுதியில் (மேட்டூரில்) “கலோமெரா அங்குலேட்டா” (Sand Tiger Beetle Calomera angulata) என்ற புலி வண்டு இனத்தை பதிவு செய்துள்ளேன்.
இவ்வினம் இப்போது முதன்முறையாக சேலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புலிவண்டின் உடலைமைப்பு
சற்றுக் கூர்ந்து கவனித்தால், புலி வண்டுகளின் தனித்துவமான உடலமைப்பு எளிதில் நம் கவனத்தை ஈர்க்கும். இவற்றின் முகப்பகுதியில் காணப்படும் வளைந்த, கூர்மையான கீழ்த்தாடைப் பற்கள் (Mandibles) இரையைப் பிடிக்க உதவுகின்றன. தலையில் உள்ள இரண்டு உணர் நீட்சிகள் (Antennae) சுற்றுப்புற மாற்றங்களை உணரவும், பெரிய கூட்டுக்கண்கள் இரையைக் கண்டறியவும் பயன்படுகின்றன.

வேகமாக ஓடுவதற்கேற்ற நீண்ட, மெல்லிய ஆறு கால்களையும் இவை கொண்டுள்ளன. முன் இறக்கைகள் மாற்றமடைந்து உறுதியான கவசம் போன்ற எளிட்ராவாக (Elytra) அமைந்துள்ளன. பறக்கும் போது, புலி வண்டு முதலில் எளிட்ராவை உயர்த்தி, அதன் கீழுள்ள இறக்கைகளை விரித்து பறக்கிறது. எளிட்ராவில் காணப்படும் பல்வேறு நிறங்கள், புள்ளிகள் மற்றும் வடிவமைப்புகள் புலி வண்டு இனங்களை அடையாளம் காண முக்கியமான பண்புகளாக விளங்குகின்றன.