International
oi-Vigneshkumar
வாஷிங்டன்: பூமியை போலவே இந்த பால்வெளி மண்டலத்தில் வேறு எதாவது கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா என்பதே இப்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கிடையே புதிய சூப்பர் எர்த் கிரகத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பூமிக்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில், உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கக்கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிய ‘சூப்பர் எர்த்’ வகையைச் சேர்ந்ததாகும். இது மற்ற சூப்பர் எர்த் போல இல்லாமல்.. ஒப்பீட்டளவில் கொஞ்சம் அருகே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஒளி ஆண்டுகள்
அருகே என்றவுடன் ஏதோ சில ஆயிரம் கிமீ என நினைத்துவிட வேண்டாம். GJ 3378b, பூமியில் இருந்து சுமார் 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சிவப்பு டார்ப் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. ஒளி ஆண்டு என்றால்.. நாம் ஒளியின் வேகத்தில் பயணித்தால் எவ்வளவு தூரம் செல்வோமோ.. அதைத் தான் குறிக்கிறது. நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் 25 ஆண்டுகளில் இந்த கிரகத்திற்குப் போய்விடுவோம் என்பதே அதன் பொருளாகும்.
இது குறித்த ஆய்வு முடிவுகள் The Astrophysical Journal இதழில் வெளியாகியுள்ளது. 25 ஒளி ஆண்டுகள் என்பது மிகப் பெரிய தூரமாகத் தோன்றினாலும், பால்வெளி விண்மீன் மண்டலத்தின் விட்டம் சுமார் 1 லட்சம் ஒளி ஆண்டுகள் என்பதால், இது பூமிக்கு மிகவும் அருகிலுள்ள கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கிரகத்தின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், அது தனது நட்சத்திரத்தில் வாழ்வதற்கு ஏற்ற மண்டலத்தில் அமைந்துள்ளது.
வெப்பம்
அதாவது இந்தப் பகுதியில் வெப்பநிலை மிகவும் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்காது. இதனால், கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். உயிர்கள் உருவாகத் தண்ணீர் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. GJ 3378b தனது நட்சத்திரத்திலிருந்து பெறும் வெப்பக் கதிர்வீச்சு, பூமி சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தில் சுமார் 90 சதவீதம் ஆகும். அதாவது, உயிர்கள் வாழ ஏற்ற சூழல் இருக்கக்கூடிய சரியான இடத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளது.
முக்கிய கேள்வி
அதேநேரம் இதை வைத்தே இந்த கிரகத்தில் உயிர் இருக்கிறதா என்பதைச் சொல்லிவிட முடியாது. இந்த கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி ஒன்று இன்னும் பதிலின்றி உள்ளது. அதாவது, GJ 3378b-க்கு வளிமண்டலம் இருக்கிறதா? என்பதே அந்த கேள்வி. ஒரு கிரகத்தில் வளிமண்டலம் இருந்தால் தான் வெப்பநிலை சீராக இருக்கும். மேலும், விண்வெளியில் இருந்து வரும் ஆபத்தான கதிர்வீச்சுகளிலிருந்தும் அது பாதுகாக்கும்.
ஆதாரம் இல்லை
GJ 3378b “Cosmic Shoreline” எனப்படும் எல்லைப் பகுதியில் உள்ளது. அதாவது அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசை அதன் வளிமண்டலத்தைத் தக்கவைத்துக் கொள்ள போதுமானதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதற்கு உதாரணமாக நமது செவ்வாய் கிரகத்தை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருகாலத்தில் செவ்வாயிலும் அடர்த்தியான வளிமண்டலம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், சூரியனில் இருந்து வந்த கதிர்வீச்சால் அந்த வளிமண்டலம் படிப்படியாக அழித்துவிட்டது. இதனால் அந்த கிரகம் இப்போது குளிர்ச்சியான, வறண்ட கிரகமாக மாறிவிட்டது.
அதேநேரம் இது தொடக்க நிலை ஆய்வுகளிலேயே உள்ளது. வரும் காலங்களில் இது தொடர்பாகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த GJ 3378b-வில் வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அங்கு உயிர்கள், தண்ணீர் உள்ளனவா என்ற ஆய்வுகளைத் தொடங்கவும் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.