“சூரசம்ஹார விழாவில் ` முதல்வருக்கு அரோகரா' முழக்கம்; மரபுகளை அவமதிக்கும் செயல்!"- அண்ணாமலை கண்டனம்

Spread the love

திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு “அரோகரா” என முழக்கமிட்டதற்கு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

” நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு “அரோகரா” என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா
திருச்செந்தூர் சூரசம்ஹார விழா

“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.

இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *