இசையமைப்பாளர் அனிருத் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் ‘வை திஸ் கொலவெறி டி’ பாடல் வெளியாகிப் பயங்கர ஹிட்டடித்தது.
15 வருடங்களில் எண்ணற்ற ஹிட் பாடல்கள், உச்ச நட்சத்திரங்களின் படங்கள் எனப் பல்வேறு மைல்கற்களை அவர் தொட்டுவிட்டார். திரைத்துறையில் 15 ஆண்டுகள் கடந்திருப்பது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “15 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் எங்களின் முதல் பாடல் இந்த உலகிற்குள் அடியெடுத்து வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை இது ஒரு தொடர்ச்சியான, தடையற்ற பயணமாக இருந்து வருகிறது.
இசை, நினைவுகள், கொண்டாட்டம் மற்றும் மேஜிக் நிறைந்த 15 ஆண்டுகள். தமிழிலிருந்து தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கும், ஒரு இதயத்திலிருந்து கோடிக்கணக்கான உங்கள் இதயங்களுக்கும் சென்றடைந்த பயணம்.
சுயாதீன இசை, எங்களுக்குப் பிடித்த சர்வதேசக் கலைஞர்களுடனான கனவுக் கூட்டணிகள், எந்த மொழியாக இருந்தாலும் எங்களை அழைக்கும் அனைவருக்காகவும் பாடுவது, நாடு கண்ட மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் பங்கெடுக்கும் பாக்கியம் எனப் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தப் பயணத்தில், நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்கள், நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி, திரையுலகின் தலைசிறந்தவர்களோடு இசையையும் இனிய நினைவுகளையும் உருவாக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
ஸ்ட்ரீமிங் சாதனைகள், கோடிக்கணக்கான ரசிகர்களின் செவிகளைச் சென்றடைந்தது முதல், உலகெங்கிலும் அரங்கு நிறைந்த மைதானங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியது வரை நீங்கள் காட்டிய அன்பு அசாத்தியமானது.
இசை நிகழ்ச்சிகளின் ஆரவாரமும், அந்த உற்சாகமும், இசை எல்லைகளைத் தாண்டிப் பயணிப்பதைப் பார்க்கும் உணர்வும் நாங்கள் கனவில் மட்டுமே நினைத்துப் பார்த்த தருணங்கள்.
ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கூட்டணியும், ஒவ்வொரு சாதனையும், ஒவ்வொரு மேடையும், ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு வரம். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது எது தெரியுமா? ‘எல்.ஐ.கே’, ‘ஜனநாயகன்’, ‘டி.சி’, ‘பாரடைஸ்’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களுடன் எங்களுக்கு இந்த ஆண்டு அற்புதமாக அமைந்ததுதான்.
15 ஆண்டுகளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி வேறு என்ன இருக்க முடியும்? இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, எங்களின் புதிய முயற்சியான ‘ஆல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்’ ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
எங்களுக்கு இவ்வளவு கொடுத்த இந்தத் திரைத்துறைக்குத் திருப்பிச் செலுத்தவும், அடுத்த தலைமுறை இசை மற்றும் திறமைசாலிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இது ஒரு நல்வாய்ப்பு.
ஒவ்வொரு வெற்றியிலும், ஒவ்வொரு சவாலிலும், ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம்; இனியும் ஒரு நாள் கூட ஓய்வெடுக்கும் எண்ணமில்லை. இவை அனைத்தையும் தொடங்கி வைத்த அதே இசை மீதான காதல்தான் எங்களைத் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருக்கிறது.

எங்கள் மனதில் இருப்பதெல்லாம் நன்றி உணர்வு மட்டுமே. எங்கள் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டவர்கள், எங்களோடு சேர்ந்து பாடியவர்கள், கொண்டாடியவர்கள், ஆதரவளித்தவர்கள், எங்களை நம்பியவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயணம் எங்களுக்குச் சொந்தமானதைப் போலவே உங்களுக்கும் சொந்தமானது.
15 ஆண்டுகள் கடந்துவிட்டன. எண்ணற்ற நினைவுகள். துரத்த வேண்டிய இன்னும் ஒரு மில்லியன் கனவுகள். மீண்டும் ஸ்டுடியோவிற்குத் திரும்புகிறோம்; மிகச்சிறந்தவை இனிமேல்தான் வரப்போகின்றன. இது ஆரம்பம் மட்டுமே!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.