சூரிய ஒளி மறையும் அதியச அலாஸ்கா…  வியக்க வைக்கும் மக்களின்  வாழ்க்கை! – Kumudam

Spread the love

இந்த பூமி பரப்பளவில்  நிறைந்து கிடக்கும் அதிசயங்கள் ஒவ்வொன்றும்  நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. அதிலும் சில பகுதிகளில் தோன்றும் பருவநிலை நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. குறிப்பாக அது பற்றி அறியாதவர்களுக்கு, முதல் முறையாக அது பற்றி கேள்விப்படும்போது மிகவும் சுவாரஸ்யமாகவே அமைகிறது. 

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும்  62 நாட்களுக்கு சூரிய உதயத்தை காண முடியாத இயற்கை அதிசயம் நிகழும் மாகாணம் ஒன்று அமெரிக்காவில் உள்ளது. அந்த நாட்டில் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக் நகரில் இந்த ஆண்டின் இயற்கை அதிசய நிகழ்வாக, இன்னும் 62 நாட்கள் சூரிய உதயத்தை காண முடியாது. இங்கு மீண்டும் 2027ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதிதான் உதயத்தை காணமுடியும்.

இந்த நகரில், ஒவ்வொரு ஆண்டும் போலார் நைட் (polar night) துருவ இரவு எனப்படும் ஒரு வியக்கத்தக்க இயற்கை நிகழ்வே இந்த  மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காலகட்டத்தில், சூரியன் அடிவானத்திற்குக் கீழே மறைந்திருப்பதால், இதனால் அந்த நகருக்கு நேரடி சூரிய ஒளி கிடைப்பதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், நண்பகல் நேரத்தில் கூட முழுமையான பகல் நேர வெளிச்சம் கிடைப்பதில்லை. 

மங்கலான இயற்கை வெளிச்சமும், தெரு விளக்குகளின் ஒளியுமே அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவுகின்றன. என்றாலும் இதில் பழகிபோன மக்கள் வழக்கம் போல் அன்றாட பணிகள், கல்வி கற்பது, வேலைக்கு செல்வது உள்ளிட்ட தங்களது பணிகளை எந்தவிதமான தொய்வும் இல்லாமல் செய்து வருகின்றனர் என்பதும் வியப்பான செய்திதான்.

இந்த அரிதான இயற்கை நிகழ்வு காரணமாக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக சூரிய உதயமின்றி வாழும் அலாஸ்கா மக்களின் வாழ்க்கை நிலையும்  உலக அளவில் கவனம் பெறுகிறது.  இந்த இயற்கை நிகழ்வை சர்வதேச அ ளிவில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

அலாஸ்கா பேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் வானியல் தரவுகளைக் கொண்டு  இந்த பருவகால சுழற்சியைக் கண்காணித்து வருகின்றனர்..

கடந்த நவம்பர் 18ம் தேதி உள்ளூர் நேரப்படி,  பிற்பகல் 1:42 மணிக்கு சூரியன் அடிவானத்திற்குக் கீழே மறைந்தது இந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது. 

மீண்டும் 2027ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அன்று தான் சூரியன் உதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அறிவியல் ரீதியாக, பூமி 23.5 டிகிரி சாய்வுடன் சுழல்வதே இதற்குக் காரணம். வட அரைக்கோளத்தில் குளிர்காலம் நிலவும்போது, வட துருவம் சூரியனை விட்டு விலகிச் சாய்ந்திருக்கும்.

உட்கியாக்விக் நகரம் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே 320 மைல் தொலைவில் அமைந்துள்ளதால், சூரியனின் அன்றாடப் பாதை முழுவதுமாக அடிவானத்திற்குக் கீழ் பகுதியில் உள்ளது. இருப்பினும், நாள் முழுவதும் முழுமையான இருள் காணப்படுவதில்லை. 

இந்த சூழலில், இந்த இயற்கை நிகழ்வால் ஏற்படும் பாதிப்பை, எதிர்க்கொள்ள மக்கள், பல்வேறு  வழிமுறைகளை கையாளுகின்றனர். சூரிய ஒளி இல்லாததால் ஏற்படும் வைட்டமின் D  குறைபாட்டைத் தவிர்க்க, மக்கள் Light therapy lamps சிறப்பு ஒளி சிகிச்சை விளக்குகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். 

இதை கேட்கும் போது  இயற்கையை மக்களால் வெல்ல முடியாது என்ற போதிலும், அதோடு வாழ்வதற்கு எளிதாக பழகி கொள்கிறார்கள் என்பதே புலப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *