உணவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவெக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவசாயிகள் உள்ளிட்ட யாரிடமும் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு, விவசாயிகளைப் பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

“எதிர்காலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடியே இருக்கக் கூடாது, செய்யக் கூடாது என்பதற்காக பழைய நடைமுறையை மாற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதலில் தடம் பதிப்பதற்கான வாசலை திறக்கும் விதமாக திரைமறைவில் தவெக அரசு இதனைச் செயல்படுத்துகிறது” என விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் நம்மிடம், “முதல்வர் விஜய், தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த வாக்குறுதிபடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அப்போது, `மற்ற கட்சித் தலைவர்கள் தருவதுபோல் இது வாக்குறுதி அல்ல, உத்தரவாதம்’ எனக் கடன் தள்ளுபடி குறித்துப் பேசினார். விஜய் முதல்வரான பிறகு விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து நான்கு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் மத்தியில் அரசின் அறிவிப்பு அதிருதிப்யை ஏற்படுத்தியதுடன் ஏற்க முடியாததாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முதல்வர் கவனத்தை ஈர்ப்பதற்காக 25ம் தேதி 50 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்தச் சூழலில் அரசு திசைதிருப்பும் விதமாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1970 முதல் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தனியார் கொள்முதலை தடுக்கவும், கொள்முதல் செய்யப்பட்ட தினத்திலேயே விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் கையில் கிடைக்கவும் அரசு இதனை செயல்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 56 ஆண்டுக்கால நடைமுறையை தவெக அரசு மாற்றியிருக்கிறது. நடவு பணிகளுக்கு விவசாய சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுகின்றனர். நெல்லை போட்டதும் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவார்கள். அப்படிச் செலுத்தாத விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க மாட்டார்கள்… இது தான் நடைமுறை வழக்கம்.
புதிய அறிவிப்பில் அறுவடை செய்ததும் நெல்லை கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்யும். விவசாயி வாங்கிய கடனை உடனே பிடித்தம் செய்து கொண்டு மீதித்தொகையை விவசாயிகளுக்கு செலுத்துவார்கள். இந்த அடிப்படையில் செயல்படுத்துவதற்கான அறிவிப்பைத்தான் அரசு அறிவித்துள்ளது. இம்முறை விவசாயிகளுக்கு முழு மகிழ்ச்சியை தராது. மேலும் கட்டாயப்படுத்தி கடனை வசூலிப்பதற்கு இதனை செயல்படுத்துகின்றனர். தனியார் பெரிய நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்வதற்கு உள்ளே வருவார்கள். அட்வான்ஸ் கொடுத்து விவசாயிகளிடம் நெல்லை வாங்கி விற்பனை செய்த பிறகு மீதி பணத்தை தருவார்கள்.
இவற்றை தவிர்க்கவே அரசு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல்லை பெற்று வந்தது. விவசாயிகள், எம்.எல்.ஏ-க்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டமன்றத்திலும் அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் திடீரென அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்ற முதல்வர் விஜய், விவசாயிகளின் நலனை அறியாமல், பலவேறு விபரீதங்களை உண்டாக்கக்கூடிய புதிய அறிவிப்பை எதேச்சதிகாரத்துடன் வெளியிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. உடனடியாக இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.