செங்கல்பட்டு, பொன்விளைந்த களத்தூர்… 3 திருக்கோலத்தில் ஸ்ரீராமர்: ஸ்ரீஹயக்ரீவரின் காலடி பட்ட தலம்! | chengalpattu ponvilainthakalathur sriramar temple

Spread the love

செங்கல்பட்டு நகரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். இந்த ஊரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவு பயணித்தால், பொன்பதர்கூடம் தலத்தை அடையலாம்.

இந்தத் தலத்தில் மாபெரும் அற்புதம் ஒன்று சுமார் 700 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. தேசிகன் என்னும் பெருமாள் அடியார் ஒருவர் ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் வழியில், களத்தூரில் வந்து தங்கினார்.

அவர் ஸ்ரீஹயக்ரீவருக்கு தினமும் பூஜை செய்பவர். ஒருநாள் நைவேத்தியம் படைக்க எதுவும் கிடைக்காததால், துளசி தீர்த்தத்தையே நைவேத்தியம் செய்து, அதையே தானும் பருகிவிட்டு உறங்கினார்.

அன்று இரவு… விவசாயி ஒருவர் தன் வயலில் வெள்ளைக் குதிரை ஒன்று மேய்வதைக் கண்டார். அதைத் துரத்திக்கொண்டே ஓட அந்தக் குதிரை, மகாதேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது.

சப்தம் கேட்டு எழுந்த தேசிகனிடம், விவசாயி விஷயத்தைக் கூற, மகாதேசிகனுக்கு மெய் சிலிர்த்தது. களத்தை மேய்ந்தது சாதாரணக் குதிரை அல்ல… சாட்சாத் ஹயக்ரீவரே என்று உணர்ந்த மகாதேசிகன், உடனடியாக அந்த விவசாயியின் நிலத்துக்குச் சென்றார்.

செங்கல்பட்டு, பொன்விளைந்த களத்தூர் ராமர் கோயில்

செங்கல்பட்டு, பொன்விளைந்த களத்தூர் ராமர் கோயில்

அங்கே… வெள்ளைக் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் நெல்மணிகளுக்குப் பதிலாக பொன்மணிகள் விளைந்திருந்தனவாம். களத்தில் (வயலில்) பொன் விளைந்ததால், அந்த ஊருக்குப் பெயர் – பொன்விளைந்த களத்தூர் என்றானது.

அந்தப் பொன்னின் பதர்கள் காற்றில் பறந்து வந்து விழுந்த இடம், பொன்பதர்க் கூடம் எனப் பெயர் பெற்றது. அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் மிகவும் பழைமையான இரண்டு ஆலயங்கள் உள்ளன.

ஒன்று ஸ்ரீநரசிம்மர் ஆலயம். மற்றொன்று ஸ்ரீராமர் ஆலயம். நாம் இரண்டையும் ஒன்றாகக் கருதி தவறாமல் வழிபட வேண்டும்.

இங்கு ஸ்ரீநரசிம்மர் ஸ்ரீஅஹோபிலவல்லித் தாயார் சமேதராக அருள்கிறார். முற்காலத்தில் இந்த மூர்த்தி மாமல்லபுரத்தில் இருந்தவராம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் அந்நியர்களால் மாமல்லபுரத்துக்கு ஆபத்து வந்தபோது, ஸ்ரீநரசிம்மரே அசரீரியாக தன்னை மேற்கு நோக்கிக் கொண்டு செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே கோயில் கட்டித் தன்னை பிரதிஷ்டை செய்யும்படியும் அருளினாராம். இங்கே ஸ்ரீஹயக்ரீவருக்கும் சந்நிதி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *