100 மில்லி பசும்பாலில் புரதச்சத்து 3.5 கிராம் இருக்கும். தாய்ப்பாலில் அது 1.1 கிராம் இருக்கும். பசும்பாலில் உள்ள அதிகப்படியான புரதம், சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும். அது குழந்தையின் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.
மெட்டபாலிக் ஸ்ட்ரெஸ் எனப்படும் வளர்சிதைமாற்ற அழுத்தமும் அதிகரிக்கும். பசும்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான டிஹெச்ஏ (DHA) மற்றும் அராகிடோனிக் அமிலம் (Arachidonic Acid) இல்லை.
தாய்ப்பாலில் இம்யூனோகுளோபிலின் (Immunoglobulin) , லாக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் லைசோசைம் (Lysozyme) போன்றவை உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவும் இவை எதுவும் பசும்பாலில் கிடையாது. கேசின் (Casein)- லாக்டோஆல்புமின் (Lactalbumin) விகிதம் என ஒன்று உண்டு. தாய்ப்பாலில் இது 40:60 என்ற விகிதத்தில் இருக்கும். அதுவே பசும்பாலில் 80:20 என்ற விகிதத்தில் இருக்கும்.
அதனால் பசும்பாலை செரிமானம் செய்வதும் குழந்தைகளுக்குக் கடினமாக இருக்கும். அதனால்தான் தாய்ப்பால் இல்லாத நிலையில், பசும்பாலைப் பரிந்துரைக்காமல், ஃபார்முலா மில்க் எனப்படும் பவுடர் பாலை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அது கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையாக இருப்பதுதான் காரணம்.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன பிறகு கஞ்சி போன்ற உணவுகளைக் கொடுக்கத் தொடங்கும்போது, அதில் மிகச் சிறிதளவு பால் சேர்க்கலாம். அதுவும் மருத்துவரின் அனுமதிபெற்றே சேர்க்கப்பட வேண்டும்.
பாலாக கொடுப்பதைவிடவும் தயிராகக் கொடுப்பது இன்னும் சிறந்தது. தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் மிகச்சிறந்த பரிந்துரை என்பதை நினைவில் கொள்ளவும்.
தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்ய, தகுந்த “இன்ஃபான்ட் ஃபார்முலா’ (Infant Formula) உணவை உங்கள் குழந்தைநல மருத்துவரிடம் ஆலோசித்துக் கொடுக்கலாம்.
குழந்தைக்கான உணவுமுறை சார்ந்த முடிவுகள், தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மறக்காதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.