கண்வ முனிவரும், கௌதம ரிஷியும் வணங்கி வழிபட்ட ஈசன் இந்த ஆட்சீஸ்வரர். பார்க்கபுரீஸ்வரர், ஸ்திரவாசபுரீஸ்வரர், ஆட்சி கொண்டநாதர் ஆகிய திருப்பெயர்களும் இவருக்கு உண்டு. திரிபுரம் எரித்து அசுரர்களை அழித்து, தேவர்களுக்கு அவர்கள் இழந்த பெருமையையும் பதவியையும் அளித்தவர் என்பதாலோ என்னவோ, ஆட்சி அதிகாரப் பதவிகளை வழங்கும் ஈசனாகக் கருதி இவரை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்களுக்கு ஆட்சி பலத்தையும், ஆட்சியில் ஸ்திரத் தன்மையையும் தரக்கூடிய பெருமான் இவர் என்பது ஆன்றோர் வாக்கு. மட்டுமன்றி நல்ல உத்தியோகம், செய்யும் பணியில் உயர்பதவி, வாழ்வில் உயர்நிலை அடையவும் அருள்கிடைக்கும்; பிள்ளைகள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

ஈசன் திரிபுராதிகளை அடக்கினார் என்று பார்த்தோம் அல்லவா. அவர்களில் தாரகனும், வித்யுன்மாலியும் இறைவனின் துவாரபாலகர் ஆகும் பேறு பெற்றார்களாம். இந்தக் கோயிலிலும் அவர்களே துவார பாலகர்களாக அருள்கிறார்கள். மூன்றாவது அசுரனான கமலாட்சன் ‘குடமுழா’ எனப்படும் பஞ்சமுக வாத்தியம் இசைக்கும் பேறு பெற்றான் என்கிறது புராணம்.
கருவறை கோஷ்டமூர்த்தங்களாக சோமாஸ்கந்தர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோரைத் தரிசிக்கலாம். தனிச் சந்நிதியில் சண்டிகேஸ் வரர் அருள்கிறார்.
இந்தப் பெருமானுக்கான நாயகி அருள்மிகு இளங்கிளி அம்மன். வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டுள்ளாள். சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, அதிசுந்தர மின்னாள் ஆகிய திருப் பெயர்களும் உண்டு. அபய வரதம் தாங்கி, நான்கு திருக் கரங்களுடன் அருளும் இந்த அம்பாளை வணங்கி வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ தினங்கள், சோமவார நாள்கள் அல்லது அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் குடும்பத்துடன் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். வில்வம் சமர்ப்பித்து ஆட்சிபுரீஸ்வரரை மனதார வணங்கி வேண்டிக்கொள்ளுங்கள் அம்பாள் இருவருக்கும் நறுமணப் பூக்களைச் சமர்ப்பித்து, ஆலயத்தில் நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.
ஆட்சீஸ்வரரின் திருவருளால் நல்ல கல்வியும் ஆட்சி அதிகாரம் மிகுந்த உத்தியோக வாய்ப்பும் வளமான வாழ்க்கையும் அமையும்.