ஆபாசப் புகைப்படம் மற்றும் வீடியோகளை கோவையில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு அவர் அனுப்பியிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து விடுதியின் காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தியதில், மகரஜோதி சக பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து வெளியாளுக்கு அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மகரஜோதி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவையைச் சேர்ந்த கண்ணன் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.
பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்த மகரஜோதியைக் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், விடுதிப் பெண்களைப் பல்வேறு கோணங்களில் ஆபாசமாகப் படம் பிடித்து அனுப்புமாறு அவரது முறையற்ற ஆண் நண்பரான கண்ணன் வற்புறுத்தியதாகவும், அவரை சந்தோஷப்படுத்தவே இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்டதாகவும் மகரஜோதி வாக்குமூலம் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து முக்கியக் குற்றவாளியான கண்ணனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தான் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்த கண்ணன் தலைமறைவானார். கோவை மாவட்டம் பேரூர் தாலுகா பாரதியார்புரத்தில் வசித்து வந்த அவர் தலைமறைவான நிலையில், நெல்லை மாநகரப் போலீள் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கினார். தனிப்படை போலீஸார் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த கண்ணனை கண்டுபிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை நெல்லைக்கு அழைத்து வந்த போலீஸார், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.