இத்தலத்தின் அம்பிகை `ஸ்ரீஆரணவல்லி’ என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்படுகிறாள். `ஆரணம்’ என்றால் `வேதம்’ என்று பொருள். வேத நாயகனும் வேதியா் நாயகனும் ஆன ஈசனின் தேவி என்பதால் அம்பிகைக்கு `ஆரணவல்லி’ (வேதவல்லி) என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.
சிறுதாவூா் ஸ்ரீபூதகிரீஸ்வரா் திருக் கோயிலில் அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமான், தன் திருமுகத்தை மட்டும் தெற்கு முகமாகத் திருப்பி தரிசனம் தருவது, வேறு எங்கும் காண்பதற்கரிய திருக்காட்சி ஆகும். இது தொடா்பாக இத்தல வரலாறு ஒரு நிகழ்வினை தெரிவிக்கிறது.
சிவபக்தா் ஒருவா், தன் ஆயுள் காலம் முடியும் தறுவாயில் இத்தல ஈசனை தரிசிக்க வந்துள்ளாா். தரிசனம் முடிந்து வெளியே வரும் நேரத்தில் அந்த பக்தரின் உயிரைப் பறிக்கலாம் என எமதா்மன் தன் தூதா்களுடன் சந்நிதிக்கு வெளியில் காத்திருந்தாா்.

அப்போது எமதர்மனின் பக்கம் திரும்பிய நந்தி அவரிடம்,
“தா்ம ராஜனே! உயிா் பிரியும் தறுவாயில் ஒரு ஜீவன் சிவநாமத்தை உச்சரித்து விட்டால், அந்த ஜீவன் எமபுரம் வருவது தவிா்க்கப்பட்டு சிவபுரம் சென்று விடும் என்பது உமக்குத் தெரியாதா?” என்று கோபமுடன் கேட்டார்.
அவ்வளவுதான்… எமதா்மராஜன் வந்த வழியே திரும்பிச் சென்றதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது. இக்கதையை ஒட்டியே இக்கோயிலில் தெற்கு நோக்கி திருமுகத்தைத் திருப்பிய நிலையில் காட்சி தருகிறாராம் நந்தி.
இங்கு பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு ஈசனையும் நந்தி எம்பெருமானையும் மனமுருகி வழிபட, நோய் நீங்கி நிவாரணம் பெறுவாா்கள் என்பதை இத்தலத்தின் அன்பா்கள் பக்தியோடு தெரிவிக்கின்றனா்.
பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் கற்றளியாக நிா்மாணிக்கப்பட்ட இத்திருத் தலத்தில், பழைமையைப் பறைசாற்றும் 16 கல்வெட்டுகள் உள்ளன. `நரசிங்க சதுா்வேதி மங்கலத்து ஸ்ரீபூதீஸ்வரா்’ எனக் கல்வெட்டுகளில் இத்தல இறைவனின் திருநாமம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழ மன்னா் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி .991), சிறுதாவூா் பூதீசுவரமுடையாா் கோயிலில் ஒரு நந்தா விளக்கு எரிக்க, சோழ மண்டலத்துக் கிளியூா் நாட்டுக் காரிமங்கல முடையான் 90 ஆடுகள் அளித்ததைக் கல்வெட்டு தொிவிக்கின்றது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலும் இந்த சுவாமியின் உச்சிகால பூஜைக்காக நிலம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படிப் பொன்னும் பொருள் சிவலோகப் பிராப்தியும் அருளும் இந்த ஈசனை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.