செங்கல்பட்டு மாவட்டம் புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் ஆலயம்: நெய் தீபம் இட்டால் பிள்ளை வரம் கிடைக்கும்!

Spread the love

அகத்திய மாமுனி தென் திசை வந்தபோது தன் பயண வழி எங்கும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட லிங்கங்கள் அனைத்தும், ‘அகத்தீஸ்வரர்’ என்று போற்றப்பட்டன.

அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஈசனை நாம் வணங்கினால் நம் கர்ம வினைகள் மறைவதோடு கேட்கும் வரமும் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். அப்படி ஒரு திருக்கோயில் மதுராந்தகம் அருகே இருக்கிறது. வாருங்கள் அந்த ஆலயத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

`சான்றோர் உடைத்து’ என்ற பெருமைக்குரிய தொண்டை மண்டலத்தில், மதுராந்தகம் சூணாம் பேடு சாலையில், மதுராந்தகத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஊர் புத்திரன் கோட்டை. இவ்வூரின்  ஆரம்பத்திலேயே அமைந்திருக்கிறது அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்.

அகத்தீஸ்வரர் கோயில்
அகத்தீஸ்வரர் கோயில்

இந்த ஆலயம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வெட்டுகளாலேயே அமைந்த ஒரு திருக்கோயில் என்று சொல்லும் அளவுக்கு, எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. எல்லாமே வெவ்வேறு கால கட்டங்களைச் சேர்ந்த அரசர்களின் 32 கல்வெட்டுகள்.

குறிப்பாக, பிற்கால பாண்டியப் பேரரசுக்கு வித்திட்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் போன்ற பல பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் காணப்படுகின்றன. பாண்டியர்களால் பெருமளவு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பதற்குச் சாட்சியாக கூரைகளில் அங்கங்கே மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அந்தக் கல்வெட்டுகளில்தான் நம்முடைய பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் ஆயிரமாயிரம் உண்மைகள் புதைந்திருக்கின்றன.

கருவறையில் ஐயனின் லிங்கத் திருமேனி கம்பீரமாகக் காட்சி அருள்கிறது. இந்த ஈசனைத் தரிசனம் செய்து மனம் உருகத் தம் குறைகளைச் சொல்லி வழிபட்டால் உடனே தீர்வு தரும் வரப்பிரசாதி இந்த ஈசன் என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். இங்கே இறைவனை அகத்தியர் வழிபட்டதற்குச் சாட்சியாக, ஐயனின் கருவறை வாயிலின் மேலாக, அகத்தியர் சிவபெருமானைப் பூஜிப்பது போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

ஐயனைத் தரிசித்துவிட்டு, பிராகாரத்தை வலம் வருகிறோம். கருவறைச் சுவரில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோரின் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன. மதில் சுவர்களிலும் விநாயகர், நடராஜர் போன்றோரின் திருவுருவச் சிலைகள் அமைந்திருக்கின்றன.

அம்பிகை முத்தாரம்பிகை என்னும் திருப்பெயருடன் எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். கல்வெட்டுகளில் அம்பிகையின் திருப்பெயர், ‘மரகத வடிவுடை நாச்சியார்’ என்று காணப்படுகிறது.

இங்கே இறைவனை தரிசித்து வணங்கினால் வயிறு சம்பந்தமான பிணிகள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமல்ல, தொடர்ந்து ஆறு பிரதோஷங்கள் இங்கு வந்து சிவபெருமானையும் அம்பிகையையும் தரிசித்து வழிபட்டால், புத்திரதோஷம் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது காலம்காலமாக இந்த ஊர்ப் பெரியவர்களால் சொல்லப்பட்டு வருகிறது.

புத்திரதோஷத்தின் காரணமாக வருந்திய ஒரு சோழ அரசன் இங்கே வந்து சிவபெருமானை வழிபட்டு புத்திரப்பேறு பெற்றதாகவும், அதற்குக் காணிக்கையாக கோயிலுக்கு மானியங்கள் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

இங்கே தனிக்கோயிலில் ஸ்ரீவள்ளிதேவசேனா சமேதராக ஷண்முகர் காட்சி அருள்கிறார். இவரைத் தரிசனம் செய்தாலே மனம் மகிழும். புண்ணிய பலன்கள் பெருகும் என்கிறார்கள். கருவறையின் தென்பகுதியில் கோஷ்டத்தில் சின்முத்திரையுடன் அருள்பாலிக்கும் ‘ஸ்ரீ தட்சிணாமூர்த்தி’யின் எழில்கோலம் நம்மை வியக்க வைக்கிறது.

முன்னொரு காலத்தில் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்த சோழ மன்னனுக்குக் குழந்தை பாக்கியம் அருளிய ஈசன் என்பதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சோழ மன்னன் பல்வேறு கிராமங்களை உபயமாக அளித்தார் என்கிறார்கள்.

புத்திரன் நினைவாகப் புதிப்பிக்கப்பட்ட ஆலயம் இது என்பதால் இந்தப் பகுதிக்கே ‘புத்திரன்கோட்டை’ என்ற திருநாமம் வாய்த்தது என்கிறார்கள்.

புத்திர பாக்கியம் வேண்டும் தம்பதியினர் இந்தத் தலத்திற்கு வந்து அகத்தீஸ்வரரை மனதார வேண்டிக்கொண்டு நெய்தீபம் ஏற்றி வழிபட விரைவில் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

மேலும் இந்த ஈசனை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும். வினைகள் நீங்கி நன்மைகள் கைகூடும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட அற்புதமான ஆலயத்துக்கு ஒருமுறை வந்து வழிபடுங்கள். அகத்தீஸ்வரர் மற்றும் முத்தாரம்பிகையின் அருள் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *