செவ்வாய் தோஷ பாதிப்பு கல்யாணத்துக்கு மட்டும்தானா? கவனிக்கவேண்டிய வேறு விஷயங்கள் என்னென்ன|Is the impact of Sevvai Dosham limited only to marriage? What other aspects should be taken into consideration?

Spread the love

செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?

பழம்பெரும் ஜோதிஷ நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? பூர்வஜென்ம வாசனையே இந்தப் பிறவியின் பலா பலன்களுக்குக் காரணம் என்கின்றன. ஆக, முற்பிறப்பில் செய்த பாவ- புண்ணியங்களுக்குத் தகுந்த பலன்களை அனுபவிப்பதற்கு ஏற்பவே, ஒருவனின் பிறப்பு காலத்துடன் இணைகிறது.

அப்போதைய கிரகங்களின் நிலைகள்… அவன் இந்தப் பிறப்பில் அனுபவிக்க வேண்டிய பலன்களை தரத் தகுந்தவாறு அமைந்திருக்கும்.

செவ்வாய் தொஷம் போன்றவையும் அப்படித்தான். பூர்வ ஜென்மத்தில் பெற்றோரைச் சரியாகக் கவனிக்காதவர், முதிய வயதில் அவர்களை முறையாகப் பேணாதவர், மறுஜென்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவார்கள் என்கின்றன ஜோதிட நூல்கள்.

ஆக, அவர்கள் பிறக்கும்போது லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் செவ்வாய் கிரகம் அமைந் திருக்கும். அப்படி அமைந்திருந்தால் அது செவ்வாய் தோஷம்.

சரி, செவ்வாய் தோஷம் கல்யாணத்துக்கு மட்டும்தானா? வேறு விஷயங்களிலும் பாதிப்புகள் உண்டாகுமா?

செவ்வாய் எந்த இடத்தில் அமர்ந்துள்ளாரோ, அதற்கேற்ப தோஷ பாதிப்புகள் உண்டாகலாம்.

2-ல் செவ்வாய்: தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாகத் திகழ்வது இரண்டாவது இடம். அதில் செவ்வாய் இருந்தால், மற்றவர் மனத்தைப் புண்படுத்தும்படி பேச்சு வெளிப்படும். அதனால் பிரச்னைகள் எழும். குடும்பத்துக்கு உரிய இடமாகவும் இது வருவதால், குடும்ப ஒற்றுமையைக் கெடுப்பதாகவும் அமையும். மனைவியிடமும், மனைவி வழி உறவுகளிடமும் பேச்சாலேயே பிரச்னையை உண்டாக்குவார்.

4-ல் செவ்வாய்: 4-ஆம் இடம் என்பது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்தால், கடுமையான பிடிவாதம் இருக்கும். அதுவே மற்றவர்களின் புறக்கணிப்புக்கு ஆளாக்கும்.

7-ல் செவ்வாய்: ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணை மட்டுமல்லாது, கூட்டு வியாபாரத்தை விவரிக்கும். இதில் செவ்வாய் இருந்தால், வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டியாகவே பேசிக்கொண்டிருப்பார். இவர்களுக்கு, 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது.

பொதுவாகவே ரத்தம், விந்து, வீர்யம், மர்ம ஸ்தானத்துக்கு உரியவராகச் செவ்வாய் வருகிறார். மர்ம ஸ்தானத்தின் இயல்பு மற்றும் இயக்க நிலைகளை நிர்ணயிக்கும் பங்கு செவ்வாய்க்கு உண்டு. எனவேதான் திருமணத்தின்போது அத்தனை முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தோஷத்தைப் பார்க்கிறார்கள்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அறிவுப் பசி, உடற்பசியோடு வயிற்றுப் பசியும் கூடுதலாகவே இருக்கும். இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது.

8-ல் செவ்வாய்: எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திடீர் விரயம் ஏற்படும். அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிப்புகள் அதிகமாகும். நிலையாமைக்கு உரியது 8-ஆம் இடம் என்பதால், வாழ்வில் ஸ்திரத் தன்மை இருக்காது.

12-ல் செவ்வாய்: இந்த இடம் அயன, சயன, சுக ஸ்தானத்துக்கு உரியது. இதில் செவ்வாய் அமரும்போது, நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர்களை வெளிப்படையாகப் பேசவிடாமல் கல்லுளிமங்கனாக மாற்றிவிடுவார் செவ்வாய். சமூகம் தள்ளிவைக்கும் நபர்களிடம் இவர்கள் பழகி, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *