தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர்மன்றத் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த நகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தங்களில் கமிஷன் பெறப்படுவதால், பணிகள் அனைத்தும் தரமற்ற நிலையில் செய்யப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் செங்கோட்டை நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 18 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்த 45 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்டன. கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் பலரும் தங்களது வார்டுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள்.
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள் பேசுகையில், “கடந்த காலத்தில் கூட்டத்தில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சிலவற்றை மீண்டும் இந்தக் கூட்டத்திலும் வைத்து நிறைவேற்றி உள்ளனர். முந்தைய கூட்டங்களில் குறைந்த மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு தற்போது கூடுதல் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பெறுவதால் பணிகள் தரமற்றவையாகச் செய்யப்படுகின்றன. நகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்” எனத் தெரிவித்து மன்ற அரங்கில் இருந்து வெளியேறினார்கள்.