சென்னை: சிறுவன் கழுத்தை நெரித்து கொலை – கைதான ஆண் நண்பர்… தாயிடம் தீவிர விசாரணை!

Spread the love

சென்னை கோயம்பேடு அடுத்த நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் பூங்கொடி, இவருக்கும் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இந்தநிலையில் பூங்கொடியின் 9 வயது மகன் தருணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வீட்டுக்கு வந்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் வீட்டிலிருந்து வெளியில் ஓடினார். சிறுவன் தருண், மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். அவரின் அம்மா பூங்கொடி கதறி அழுதுக் கொண்டிருந்தார். இதையடுத்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சிறுவன் தருணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தருணை கொலை செய்தது யார் என்று பூங்கொடியிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில், “சிறுவன் தருணின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில் சிறுவனின் அம்மா பூங்கொடியிடம் விசாரித்தோம். அப்போது, தமிழ்ச்செல்வன்தான், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் தமிழ்ச்செல்வனை தேடி வருகிறோம். சிறுவன் தருண் கொலையில் அவனின் அம்மா பூங்கொடிக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்”‘ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *