சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், திடீரென அவையிலிருந்து வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

சி.வி.சண்முகம் பேசியதாவது, ‘அக்ரி கிருஷ்ணமூர்த்தி சமீபகாலமாக உண்மைக்கு மாறாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.மே 4 ஆம் தேதிக்கு பிறகு என்ன நடந்தது என எல்லாருக்கும் தெரியும். ஆனால், இவர்கள் பொய்யை பரப்பி விடுகிறார்கள்.
அம்மாவின் மறைவுக்கு எடப்பாடி முதல்வராக்கப்பட்டார். 2021 இல் ஆட்சியை இழந்தோம். இப்போது எதிர்க்கட்சி கூட இல்லை.
அன்றைய சூழலுக்கு வலிமையான தலைவர் வேண்டும் என்பதால் இவரை தேர்வு செய்தோம். ஆனால், இவர் பொறுப்பேற்றதிலிருந்து தோல்வி மட்டுமே அடைந்திருக்கிறோம்.
நடந்து முடிந்த தேர்தலில் 47 பேர் வென்றதற்கு எடப்பாடியின் சொந்த செல்வாக்குதான் காரணமென அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். அப்படியே வைத்துக் கொள்வோம். எனில், மீதமுள்ள 181 தொகுதிகளில் எடப்பாடி செல்லாக்காசாகிவிட்டாரா?அவர் சேலம் மாவட்டச் செயலாளரை போலத்தான் செயல்பட்டார். 2024 தேர்தலில் அவரின் சொந்த பூத்திலேயே அதிமுகவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தது. சொந்த மாவட்டத்திலேயே அவர் செல்வாக்கை இழந்துவிட்டார் எனலாமா?
நாங்கள் அப்படி அவர்களைப் போல கீழ்த்தரமாக சொல்லமாட்டோம். அப்போதைய அரசியல் சூழலும் கூட்டணியும்தான் தோல்விக்கு காரணம். வென்றால் அந்த வெற்றிக்கு காரணம் அவராம். தோற்றால் அந்த மாவட்டச் செயலாளர்கள்தான் காரணமாம். என்ன நியாயம் இது?
சென்னை, டெல்டா, தென் மாவட்டங்களில் அதிமுக துடைத்தெறியப்பட யார் காரணம்?
வடமாவட்டங்களில் பாமக நம்முடன் இருந்ததால் 34 தொகுதிகளில் வென்றோம்.
தேர்தல் தோல்விக்கான பழியை கட்சி நிர்வாகிகள் மீது தூக்கிப் போடும் தலைவரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? ராகுல் காந்தி கூட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினாரே. நாங்கள் உங்களை பதவி விலககூட சொல்லவில்லை. நீங்கள்தான் பொதுச்செயலாளர். ஆனால், தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டுமல்லவா? திமுகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் ஐடியா கொடுத்தோம் என எடப்பாடி தரப்பு சொல்வது வடிகட்டிய பொய்.
அந்த ஐடியா யாருடையது என்பதை கம்யூனிஸ்ட்டுகளிடம் விசிகவிடமும் கேளுங்கள் உண்மை தெரியும்.
திமுகவுடன் கூட்டணி என பேசும் போதுதான், திருமா முதல்வர் என ஒரு ஐடியாவோடு வந்தார்கள். நான் அதை முன்மொழிந்தேன். ஆனால், எடப்பாடி ஏற்கவில்லை. எனில் திமுகவை எதிர்க்கும் தவெகவோடு கூட்டணி போவோம் என்றேன். அதையும் எடப்பாடி ஏற்கவில்லை.தேர்தலுக்கே வேலை செய்யாத ஆட்களை அழைத்து தோல்விக்கான காரணம் குறித்து எடப்பாடி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.
கூட்டத்துக்கு எங்களை அழையுங்கள். நாங்கள் உண்மையான காரணத்தை சொல்கிறோம். எடப்பாடி பொறுப்புக்கு வந்த பிறகு சந்தித்த எந்த தேர்தலுக்கும் அவர் விழுப்புரம் மாவட்டத்துக்காக ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. பின்னர் எப்படி எங்களை குறை சொல்கிறீர்கள்?
தோல்விக்கு எல்லாரும்தான் பொறுப்பு. கூடி பேசுவோம். கடந்த தேர்தல்களில் தினகரனையும் தேமுதிகவையும் திட்டமிட்டு கூட்டணியிலிருந்து வெளியேற்றினார்’ என கொந்தளித்திருக்கிறார்