ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், தனது நீண்டகால பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பிறகு புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை நியமித்துள்ளது. இந்த நியமனம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், இந்தப் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானியின் பெயர் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், கடைசி நேரப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சிக்கல்களால் அது கைநழுவிப் போயுள்ளது.
கைநழுவிய ஹேமங் பதானி… என்னதான் காரணம்?
ஸ்டீபன் ஃபிளெமிங்கின் பதவிக்காலம் முடிந்ததும், ரூபா குருநாத் தலைமையிலான சிஎஸ்கே நிர்வாகம், இந்தியர் ஒருவரையே தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. அந்த வகையில், ஹேமங் பதானிதான் முதல் தேர்வாக இருந்தார். சம்பளம் மற்றும் ஒப்பந்த காலம் குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இரண்டு முக்கிய விஷயங்கள் இந்த ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன.
சிஎஸ்கே அணி நிர்வாகம், ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் வகையில் செயல்பட விரும்பியது. ஆனால், பதானியோ குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கொண்ட நீண்ட கால ஒப்பந்தத்தை எதிர்பார்த்தார். அப்போதுதான், ஒரு அணியை முழுமையாக கட்டமைத்து, அதன் வெற்றிக்கு பொறுப்பேற்க முடியும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.

குறைக்கப்பட்ட பொறுப்பும் ஒரு சிக்கல்!
ஆரம்பத்தில், சிஎஸ்கே-யின் வெளிநாட்டு லீக் அணிகளான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (SA20) உட்பட மூன்று அணிகளுக்குப் பயிற்சியாளராக செயல்படும் வாய்ப்பு பதானிக்கு வழங்கப்படும் எனத் தென்பட்டது. ஆனால், திடீரென ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக ஆல்பி மோர்கல் நியமிக்கப்பட்டது, பதானியுடனான பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
சிஎஸ்கே அணிக்கு மட்டும் குறுகிய கால ஒப்பந்தத்தில் பணியாற்ற அவர் விரும்பவில்லை. “தங்களால் உருவாக்கப்படாத ஒரு அணியை வழிநடத்தி, அதன் செயல்பாடுகளுக்காக விமர்சிக்கப்படுவதை ஏற்பது சரியாக இருக்காது,” என பதானி மற்றும் இந்தப் போட்டியில் இருந்த மற்றொரு முன்னாள் இந்திய வீரரும் கருதியதாக ஆங்கில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.