
கடந்த 23-ந்தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 103 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி (23ரன்), கொல்கத்தா (32ரன்), ஆகியவற்றையும் வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தான் (8 விக்கெட்), பஞ்சாப் (5 விக்கெட்) , பெங்களூரு (43 ரன்), ஐதராபாத் (10 ரன்), குஜராத் ( 8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோல்வியை தழுவியது.ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே. அணி மும்பையை மீண்டும் வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கத்தில் நாளை நடைபெறுவது 5-வது போட்டியாகும். சென்னை அணி சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் தோற்றது. அடுத்த 2 போட்டியில் வெற்றி பெற்றது. 4- வது ஆட்டத்தில் குஜராத்திடம் மோசமாக ஆடி வீழ்ந்தது. மும்பை இந்தியன்சை ஏற்கெனவே தோற்கடித்து இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். சேப்பாக்கத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சி.எஸ்கே. வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் இலவசமாக பயணிக்கலாம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசி கர்களுக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சி.எஸ்.கே. கிரிக்கெட் லிமிடெட் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.அதன்படி, போட்டிக்கான மின்னணு அல்லது காகித பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், அதில் உள்ள பிரத்யேக கியூ.ஆர். குறியீட்டை மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம். இந்த சலுகை மூலம் ரசிகர்கள் 2 முறை நுழைவு மற்றும் 2 முறை வெளியேறுதலை இலவசமாக பயணிக்க அனுமதி உண்டு.
சென்னை மெட்ரோவின் எந்தவொரு நிலையத்திலிருந்தும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு செல்லவும், அங்கிருந்து திரும்பவும் இந்த வசதி பொருந்தும். போட்டி முடிந்து ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களுக்குச் செல்லும் கடைசி ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும். பச்சை வழித்தடத்தில் பயணம் செய்பவர்கள், சென்னை சென்டிரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே வழித்தடம் மாற்றம் செய்ய முடியும். ரசிகர்கள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நிலையத்திற்குள் வரவேண்டும்.