விண்மீன்களை கண்ட பெண், அங்கீகாரம் மறுக்கப்பட்ட விஞ்ஞானி – டேம் சூசன் பெல் பர்னெலின் கதை | My Vikatan article about dame susan jocelyn bell burnell

Spread the love

பல்வேறு துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள துடிப்பு விண்மீன்களின் கண்டுபிடிப்பு, நியூட்ரான் விண்மீன்களின் இயல்பு குறித்த புதிய நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டைச் சோதிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்பட்ட துடிப்பு விண்மீன்கள், தற்போது அண்டவியல் காலக்கணிப்புத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவது தொடர்பான தனது ஆய்வை பெல் பர்னல் நிறைவு செய்த பிறகு, துடிப்பு விண்மீன்களைக் கண்டறிந்தமைக்காகப் 1974-ஆம் ஆண்டில் பேராசிரியர் ஆண்டனி ஹியூவிஷிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பெல் பர்னலின் பங்களிப்புகளை அங்கீகரிக்கத் தவறிய நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் நடவடிக்கைக்கு சர் ஃப்ரெட் ஹாயில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

1977-ஆம் ஆண்டில் ஓர் நேர்காணலில், துடிப்பு விண்மீன்கள் கண்டறியப்பட்ட சமயத்தில் தான் ஒரு மாணவியாகவே இருந்ததால், தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாத முடிவு பொருத்தமானதாக  கருதுவதாக பெல் பர்னல் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

பெல் பர்னெல்லுக்கு நோபல் பரிசு வழங்கப்படாவிட்டாலும், அவர் பல வழிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு முதல், அவர் ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ (Order of the British Empire) அமைப்பின் ‘டேம் கமாண்டர்’ (Dame Commander) பதவியை வகித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின்  மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டில், ‘ராயல் சொசைட்டி ஆஃப் எடின்பர்க்’ அமைப்பின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2018-ஆம் ஆண்டு, துடிப்பு விண்மீன்கள்களைக் கண்டுபிடித்ததற்காக, “அறிவியலின் ஆஸ்கார்” என்று அழைக்கப்படும் ‘பிரேக்த்ரூ’ (Breakthrough Prize) பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அப்பரிசின் மூலம் தனக்குக் கிடைத்த மூன்று மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை, சிறுபான்மை, அகதி மாணவர்கள் மற்றும் பெண்களை இயற்பியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க உதவிடும் வகையில், ‘இயற்பியல் நிறுவனத்திற்கு’ (Institute of Physics) அவர் நன்கொடையாக அளித்தார்.

2021 ஆம் ஆண்டில், லண்டன் ‘ராயல் சொசைட்டி’ அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இங்கிலாந்தின் மிக உயர்ந்த அறிவியல் கௌரவமான ‘காப்லி பதக்கத்தை’ (Copley Medal) அவர் பெற்றார்.   இளம் பெண்களுக்கு நேர்மறையான முன்மாதிரியாகத் திகழ்வதன் முக்கியத்துவத்தை ஆழமாக நம்பும் அவர், தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையின் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *