மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அவர் கணவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அவர் படித்துக் கொண்டே வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்த அந்தப் பெண், தன்னடைய போட்டோ உள்ளிட்ட விவரங்களை திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். அதைப் பார்த்த ராஜீவ் என்ற இளைஞர், அந்தப் பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ராஜீவ்வை அந்தப் பெண் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ராஜீவ், தன்னுடைய மனைவி இறந்துவிட்டதாகவும், உங்களையும் உங்கள் குழந்தையையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என கூறியிருக்கிறார். ராஜீவ்வின் அந்த அக்கறை, அன்பான பேச்சை அந்தப் பெண் முழுமையாக நம்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருவரும் போனில் மணிக்கணக்கில் பேசி வந்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜீவ்வும் இளம்பெண்ணும் விடுதி ஒன்றில் சந்தித்திருக்கிறார்கள். அப்போது இளம்பெண்ணுடன் ராஜீவ் தனிமையில் இருந்திருக்கிறார். இதற்கிடையில் அந்த இளம்பெண்ணை மறுமணம் செய்து கொள்வதாகக் கூறிய ராஜீவ் அவரிடமிருந்து தங்க நகைகளையும் பணத்தையும் அவ்வப்போது வாங்கியிருக்கிறார். வருங்கால கணவர் என்று கருதி அந்த இளம்பெண்ணும் கொடுத்திருக்கிறார். நவம்பர் 13-ம் தேதிக்கு பிறகு ராஜீவ்வை இளம்பெண் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு ராஜீவ்வை அந்தப் பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதைடுத்து ராஜீவ் தன்னை மறுமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் உறவு கொண்டதாகவும் தங்க நகைகள், பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாகவும் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் சேலையூர் அனைத்து மகளிர் போலீஸார், வழக்குப்பதிவு செய்து ராஜீவ்வை கைது செய்தனர். பெண்ணிடம் வாங்கிய தங்க நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ராஜீவ் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.