சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிடுவார். அதைப் போல சம்பவத்தன்றும் மூதாட்டி அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி வேளச்சேரி நோக்கி தனியாக நடந்துச் சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர், மூதாட்டியிடம் இந்த நேரத்தில் தனியாக எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்திருக்கிறார்கள். அதற்கு மூதாட்டி, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். மூதாட்டியை நோட்டமிட்ட இளைஞர்கள், அவரிடம் அன்பாக பேசி பைக்கில் ஏற்றியிருக்கிறார்கள். பின்னர் வேளச்சேரிக்கு மூதாட்டியை அழைத்துச் சென்ற இளைஞர்கள், அங்குள்ள ஒரு பார்க்கில் அவரை கீழே இறங்கும்படி கூறியிருக்கிறார்கள். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதிக்கு மூதாட்டியை தூக்கிச் சென்ற இருவரும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
இதில் மூதாட்டி மயக்க மடைந்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், மூதாட்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். பொழுது விடிந்ததும் பார்க்கிற்கு வந்த பொதுமக்கள், மூதாட்டி ஒருவர், அரை குறை ஆடையுடன் மயங்கி கிடப்பதைப் பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர், போலீஸார், மூதாட்டியை மீட்டு எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக கிண்டி உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது மூதாட்டியை பைக்கில் அழைத்து வந்த இளைஞர்கள் குறித்த தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. குறிப்பாக பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரைச் சேர்ந்த முகமது ஆதில், முகமது என தெரியவந்தது. இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் வேலைப்பார்த்து வருகிறார்கள். வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்குச் செல்லும் போதுதான் மூதாட்டியிடம் தவறாக நடந்திருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.